உரிமைகள் பறிக்கபடும்
உலவும் உயிர்களுக்கெலலாம் தரபடும் அடையாளம் உரிமை
உனக்கும் எனக்கும்
தரபடும் அங்கீகாரம் உரிமை
உறங்கிய குழந்தையின் பிடியிலிருந்து பொம்மையை பறிப்பதாய்
உரிமைகள் பறிக்கபடுகிறது ஆறறிவும் விழித்திருப்பதாய் நம்பும் நம்மிடமிருந்து
கணினி தளங்கள் மட்டுமே மைதானமானால்
கடல்தண்ணிக்கு கூட கப்பம்
கட்ட சொன்னால்
விவசாயிகள் வசமிருக்கும் வயல்வெளியெல்லாம்
வியாபாரிக்கு கைமாறினால்
இங்கே ஆரோக்கியத்திற்கான
உரிமைகள் பறிக்கபடும்
கல்லூரிகள் கல்லா கட்டும்
களவாணிகள் கைபோனால்
கலைகூடங்கள் வெறுமனே காதலர் பூங்காவாய் இயங்குமேயானால்
மதிப்பெண்கள் மட்டுமே மரியாதை என்றால்
பட்டறிவும் பட்டம் பெற்ற அறிவும்
பணத்திற்கு பணிந்துவிட்டால்
இங்கே கல்விக்கான உரிமைகள் பறிக்கபடும்
பழைய புராணங்களின்
பக்கங்களில் புதைந்துவிட்டால்
மதங்களின் மாட்சிமை
மாறாக சித்தரிக்கபட்டால்
சட்டவிரோத செயலெல்லாம் சம்பிரதாயம் என்று கொடி பிடித்தால்
தொட்டு பேசுவதெல்லாம் பாலியல் வர்த்தகம் என்று எண்ணி கொண்டால்
இங்கே கலாசாரத்திற்கான
உரிமைகள் பறிக்கபடும்
சாதிய வெறியில் ஊறிய உள்ளங்கள்
குறுகிய எண்ணத்தி்ல்
கூட்டணி அமைத்தவர்கள்
ஆண்மையின் பெயரில்
ஆணவம் சேர்த்தவர்கள்
அரசினை ஆளும் ஆட்சிக்கு வந்துவிட்டால்
இங்கே சமத்துவத்திற்கான
உரிமைகள் பறிக்கபடும்
நலிந்த மக்களின் நாவிற்கு
சூடு இட்டால்
நிமிர்ந்த கரங்களின் பேனாவிற்கு
தடை விதித்தால்
இங்கே கருத்துரிமை பறிக்கபடும்
உரிமைகளை பறிப்பது
உணர்ச்சிகளை நரம்புகளிலிருந்து நறுக்குவதாகும்
பேராசை கொண்டவன் உரிமைகளை
வாரி குடிப்பதால்
பெரும்பான்மையினருக்கு உரிமைகள் ஊற்று தண்ணீராகவே கிடைக்கிறது....
_இராஜேந்திரன் புவன் (NBR )