மீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை

சிடுசிடு சிடுவென சிடுத்திடும் மனிதரும்
==சிரித்திட வரம்தரும் செழிப்புள வதனம்
திடுதிடு திடுவென தெருவினில் வருகையில்
==திகுதிகு திகுவெனத் துடிக்குது இதயம்
குடுகுடு குடுவெனும் குறுந்தடிக் கிழவரும்
==குளுகுளுப் பாகிட குமரனாய் உதயம்
கொடுகொடு கொடுவென குமுறியே கடவுளின்
==கோயிலில் போய்நிதம் திருவடி சரணம்.

படபட படவென பறந்திடும் சிறுசிறு
==பறவையின் சிறகென இமைகளும் அடித்து
கடகட கடவென கயல்விழி மொழிகளில்
==கதைபல எழுதிடும் கலைகளும் பயின்று
மடமட மடவென மனமது குடித்திட
==மலர்வன மலரென மதுரசம் பொழிந்து
சடசட சடவென சரிகிற விதத்தினில்
==சரிகம பதநிச ஸ்வரங்களும் இசைத்து..,

சலசல சலவெனும் சலங்கைகள் குலுங்க
==சகலரின் மனதிலும் எரிமலை கனக்க
சிலுசிலு சிலுவெனும் .சிலிர்ப்புகள் விதைத்து
==சிணுங்கிடும் மழலையின் சிணுங்களைப் பகிர்ந்து
மலமல மலவென மனதினில் நுழைந்து
==மணமக ளெனவர சிறுகரம் பிடிக்க
பலபல பலவகை கனவுகள் கொடுத்து
==பகலினில் நிலவென வருகிற அழகே ...,

லொடலொட லொடவென லொடுக்கினில் கவிழ்ந்து
==லோல்படும் லொஸ்கு லொட்டு லொடுக்கு
மொடமொட மொடவென மடிப்பது கசங்கா
==முழுக்கை சட்டை அணிகிற கனவை
கொடகொட கொடவென கொட்டியே தினமும்
==கொடுஒரு மறுமொழி எனஇதழ் வினவிட
வெடவெட வெடவெடப் பெடுத்திட வைப்பதில்
==வீரனைக் கோழையாய் ஆக்குது எளிதில்.

துருதுரு துருவெனும் துடிப்புளக் குழந்தை
==துடித்திட பிடித்திடும் சிரமம் அதுவாய்
கருகரு கருவெனக் காற்றினில் அலையும்
==கூந்தல் அழகை இரசித்திடும் வண்ணம்
திருதிரு திருவென திருடனைப் போன்று
==திருமுக தரிசன தினசரி நோட்டம்
பொறுபொறு பொறுவென புந்தியை அடக்கும்
== பொழுதிலும் மறையா புன்னகை நிலவே

சரசர வெனுமொரு சாரையைக் கண்டு
==சிலிர்த்திடும் நிலைதரும் கருவிழி வண்டு
பரபரப் புளதொரு வாழ்வியல் முன்றில்
==பயங்கர மூட்டியே உயிரினைக் கொன்று
தரதர தரவென இழுத்ததை எடுத்து
==தனதுயிர் தோளினில் தனக்கெனப் போட
தொரதொர தொரவென வழிகிற இம்சை
==தொடர்கதை யாகுது மீண்டும் மீண்டும்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Nov-15, 3:05 am)
பார்வை : 143

மேலே