வின் ஞானம்

நான் இனிமேல் தேவையில்லை
என்று கிளம்பியது ஆட்டுக்கல்
நானும் வருகிறேன் என்றது அம்மிக்கல்
உங்களுக்கே வேலை இல்லாத போது நான் எதற்கு
என்று கிளம்பின மத்தும்,மற்ற சமையல் கருவிகளும்
உங்களால் தானே என்று நவீன பொருட்களை கேட்டால்
ஆம் எங்களால் தான் உங்கள் அம்மாவின் கைகள் எல்லாம்
காய்ப்பு காய்க்காமல் அழகாக உள்ளன என்கின்றன
அது என்னவோ உண்மை தான்!

அம்மியிலும் உரலிலும் அரைத்தே
அம்மாக்களின் பாதி வாழ்நாள் போய்விடும்
இன்றோ அழகாக அவர்கள் அனைத்திலும்
கவனம் செலுத்துகிறார்கள்!
ஆனால் குழந்தைகளுடன் ஏனோ
நேரம் செலவிட முடியவில்லை!

கண்ணீர் , பொட்டு,முத்தம், முடி
இவைகளை சுமந்து வந்த
எண்ணிலடங்கா காதல் மடல்கள் மறைந்து
smiley உருவங்களே நமக்காக நகைமுகம்
காட்டி சிரிக்கவும் அழுகவும் செய்கிறது.
தபால்காரனை தெய்வமாக பார்த்த காலம் போய்
அவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது

பாட்டியிடம் கெஞ்சி சுருக்குபையிலிருந்து
ஒரு ரூபாய் வாங்கி செலவு செய்ததில் உள்ள சுகம்
ஆன்லைனில் லட்சகணக்கில் வாங்கியும் இல்லை!
பேனா நண்பர்களிடம் இருந்த அன்யோன்யம்
முகநூல் நண்பர்களிடம் இல்லை!
காணொளி அழைப்பில் பக்கத்துக்கு ஊரில்
உள்ள பாட்டியின் முகம் காண முடிகிறது
ஆனால் கட்டிபிடித்து நெட்டி எடுக்கும் பாட்டியின் ஸ்பரிசம்?

எனக்கு என்னவோ வின் ஞானம் பெருமகிழ்ச்சி தான்
என் சுமார் படைப்புகளையும் இத்தளத்தில் பகிரமுடிகிறதே !

எழுதியவர் : aysha (17-Nov-15, 1:11 pm)
Tanglish : vin nanam
பார்வை : 59

மேலே