மழை

பாதை மறிக்கப்பட்ட
யானைக்கூட்டம்போல்
சுற்றியலைகிறது வெள்ளம்

வாகனங்கள் பயணிக்கும் சாலையில்
தான் பயணித்துப் பார்க்கிறது

பயணத்தை முடிக்க முடியாததால்
பாதையில் செய்கிறது மறியல்

மறியலால் ஆனது… வளர்ந்தது…
மழை அரசியல் !
***

முத்துக்களைக் கோர்த்தெடுக்க உதவும்
இழையைப் போல ஓடிக் கிடந்த
சிற்றோடைகளைக் காணவில்லை

காடு மேடெங்கும்
வீட்டு மனைகள் விரிவாக்கம்
சிற்றோடைகளைச் சிதைத்தது

சிதைத்ததால்
சிதறிப்போனது மழை முத்துக்கள்
சேரிடம் சேர திசை இழந்தது

திசை இழந்ததால்
தேங்கி நின்று அழுகிறது
மழை வெள்ளம்
நதியினை அடைய முடியாத
ஆற்றாமையுடன்
தாய் மடி சேராத குழந்தையாய் !
***
ஆற்றுக்குக் கரை உண்டு
கரைக்குக் கொஞ்சம் துணை உண்டு

இன்று
கரையினையும் துணையினையும்
அரித்து விட்டது ஆக்கிரமிப்புகள்

ஆக்கிரமிப்பை அகற்றலாம்
ஆனால் அகற்றமாட்டார்கள்

அகற்ற முயன்றால்
அகற்றுபவர்களை அகற்றிவிடுவார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்

ஆனாலும்,
அகற்ற முயற்சி செய்கிறது
அவ்வப்போது
மழை வெள்ளம் மட்டும் !
***
மழைக்கும் ஆசை இருக்காதா
என்ன?!!!
தான் வசித்த இடங்களை [ஏரி குளம் குட்டைகளை]
ஒரு நாளைக்காவது
ஒரு எட்டு பார்த்துவிட்டு
வரலாம் என்றும்
சில நாள் தங்கிவிட்டு
வரலாம் என்றும் !
***

குளம் குட்டைகளை
தூர்வாறத்தான் செய்கிறார்கள்
அது –
நீர் தேக்குவதற்கன்று
மாடி வீடுகள் கட்டுவதற்கு !
***
என்ன செய்யலாம்….
நிச்சயம் ஒரு போராட்டம்
நடத்தத்தான் வேண்டும்
மழை
ஏவி விட்ட அவலங்களுக்கும்
அவலங்களாய் சித்தரிக்கப்பட்ட
மழையை எதிர்த்தும் !
***

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (17-Nov-15, 1:29 pm)
Tanglish : mazhai
பார்வை : 265

மேலே