உன்னை வேண்டுவன
நிறை யென்ற நிலை வேண்டும்
நின்னை நினைத்திடும் மனம் வேண்டும்
மறையாத பொருளொன்றைப் பற்றிடவும் வேண்டும்!!!
முன்னைப் பிழை பொறுக்க வேண்டும்
முனியாத மோனநிலை வேண்டும்
பின்னை யென்சிந்தை பிறழாதிருத்தல் வேண்டும்!!!
கண்ணையும், கருத்தையும் கவ்விடும் காமமும்
மண்ணிலே என்னையும் மாய்த்திடும் மயக்கமும்
என்னையும் உன்னையும் பிரித்தொணாதொழிய வேண்டும்!!!
துன்பங்கள் இங்கு எதிர்படும் போதினிலே
இன்பங்கள் என்னை ஈர்த்திடும் வேளையிலும்
உன்னன்பு முகமென்னை முத்தமிடல் வேண்டும்!!!
விண்ணையும் நகர்த்திடும் வீரம் வேண்டும்
என் வேட்கை தணிவிக்கும் வெற்றி வேண்டும்
மண்ணிலே யென்பெயர் மரியாதிருக்க வேண்டும்!!!
தனியானதொரு பொழுதிற்தழுவிடும் ஏகாந்தம் வேண்டும்
நிலையானதொரு நீயாய் யான் நிலவிடவும் வேண்டும்
கனிந்திடும் வரமெலாங் கடவுளேநீயருளல் வேண்டும்!!! - சௌந்தர்