சுவிங்கத்தின் கதை

ஒரு குட்டிக்கதை

அது சொத்தென்று ஓடிக்கொண்டிருந்த காரின் பின்மூலையில் விழுந்து ஒட்டிக்கொண்டு பயணித்தது. டவுன் பஸ்ஸின் படிக்கட்டில் தொங்குபவர்கள் போல விழாமல் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருந்தது காரின் தகட்டில். ஒரு பங்களாவுக்குள் நுழைந்த அந்தக்கார் போர்ட்டிக்கோவில் இஞ்சின் அணைக்கப்பட, உள்ளிருந்து இறங்கிய கனவான் வீட்டுக்குள் சென்றுவிட, அதன் டிரைவர் சாமான்களை எடுக்க டிக்கியின் பக்கம் வந்தபோதுதான் அது அங்கிருந்ததை கவனித்தான்.

ஒரு வசவு வார்த்தையை உதிர்த்துவிட்டு போகன்வில்லாச் செடியிலிருந்து சிறியதொரு குச்சியை உடைத்துவந்து புழுவை எடுப்பதுபோல அதை எடுக்க, அது பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டிக்கொண்டதே தவிர காரைவிட்டு வரவில்லை. டிரைவர் குச்சியால் காரின் பெயிண்ட் பாதிக்காதவண்ணம் அதைச்சுரண்டியெடுத்தான், அப்படியே குச்சியுடன் காம்பவுண்டு சுவருக்கு அப்பால் சாலையோரம் எறிந்துவிட்டு, இன்னும் காரில் ஒட்டிக்கொண்டிருந்த பிசிறுகளை இரு அழுக்குத்துணியால் அகற்றிவிட்டு திருப்தியடைந்தான்.

குச்சியின்முனையில் ஒட்டியபடி சாலையோரம் விழுந்திருந்த அதனருகே ஒரு பள்ளிப்பிள்ளையின் ஷூக்கால்கள் வந்தபோது அது மகிழ்வுடன் அந்தச்சிறுவனின் ஷூவில் ஒட்டிக்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தது. லஞ்ச் பாக்ஸை ஒருவித லயத்துடன் ஆட்டியபடியும், குதித்தபடியும் நடந்த அந்தச்சிறுவன் ஒரு அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். ஒரு ஓரமாக நின்றிருந்த அவன் புது சைக்கிளை ஆசையுடன் தடவிவிட்டு மெல்லப்படியேறி இரண்டாம் தளத்திலுள்ள தன் வீட்டு காலிங்பெல்லை விடாமல் அழுத்திக்காத்திருந்தான்.

நைட்டியுடன் அவனைத்திட்டியபடியே கதவைத்திறந்த அம்மாவிடம் லஞ்ச் பாக்ஸை திணித்துவிட்டு, பள்ளிப்பையை சோபாவில் எறிந்துவிட்டு, அதிலமர்ந்து கால்மேல் கால்போட்டு ஷூவினை அவிழ்க்கும்போதுதான் அவன் அம்மா அதை கவனித்தாள். "ரோட்ல நடக்குறப்ப பத்து நடக்கமாட்டியா தம்பி" என அவனை கடிந்துகொண்டபடியே அந்த ஷூவை எடுத்துச்சென்று பால்கனியின் விளிம்புச்சுவரில் ஷூவை தேய்க்க, ஆறாம் தேய்ப்பில் வேண்டாவெறுப்பாக அது கீழேவிழுந்தது.

கீழே விழுந்த சில நிமிடங்களிலெல்லாம் அதன்மீது வந்து விழுந்த ரப்பர் கிர்க்கெட் பந்து ஒன்றை அது கெட்டியாக பிடித்துக்கொண்டு தரையில் உருண்டபோது அதன்மேல் கொஞ்சம் மண் ஒட்டிக்கொண்டது. பந்து ஒரு சாக்கடையை நோக்கி பயணித்து உள்ளே விழக்கூடிய தருணத்தின் கடைசி மைக்ரோ விநாடியில் சாக்கடை விளிப்பில் ஒரு காலால் தடுக்கப்பட்டு எதிர்திசையில் உருண்டது. அந்த பந்தை எடுத்த ஒரு சிறுவனின் கைகளில் கொஞ்சம் ஒட்டிக்கொள்ள அவன் அசூசையாக கையை உதற அது மறுபடி பந்துடன் ஒட்டிக்கொண்டது.

சிறுவனின் அதீத புத்திசாலித்தனத்தால் சுவரில் அடிக்கப்பட்ட அந்த பந்திலிருந்து அது சுவரில் ஒட்டிக்கொண்டது. சற்றைக்கெல்லாம் காரையுடன் பெயர்ந்து கீழேவிழுந்த அதன்மீது ஒரு பால்காரரின் சைக்கிள் சக்கரம் ஏறியது. சைக்கிள் எங்கெங்கோ சுற்றிவிட்டு இறுதியாக ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்றபோது அது உருக்குலைந்து சிதைந்திருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்றபின் கொட்டிய மழையை வேடிக்கை பார்த்தாடி இறுகத்துவங்கியது.

இதுதான் மென்று உமிழப்பட்ட அந்த சுவிங்கத்தின் கதை.

எழுதியவர் : செல்வமணி (20-Nov-15, 9:37 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 146

மேலே