மூடர் கூடம்

அச்சிட்ட காகிதங்களில் வாழ்வு படிக்கும் சாதனையாளர்களே,
உங்களின் புன்னகைக்கு என்ன விலை?

கற்சிலையில் கடவுள் கானும் ஞானப் பெரியோர்களே,
உணவளிக்கும் விவசாயிக்கு என்ன பெயர்?

மதியிழந்து மதுவருந்தும் மதிப்புக்குரியோர்களே,
உங்களின் உமிழ்நீர் என்ன சுவை?

மகனை வைத்து விபச்சாரம் செய்யும் பேரன்புமிக்க பெற்றோர்களே,
உங்கள் வீட்டு மின் விளக்கு என்ன நிறம்?

சொந்த பணத்தில் குழந்தையை சிறை சேர்க்கும் மேதாவிகளே,
நீங்கள் விடுதலை பெற்றது என்ன தினம்?

மலம் தொட்டு மனிதன் தொடாத பரிசுத்தமானவர்களே,
உங்கள் தாய்க்கு பிரசவம் பார்த்தவள் என்ன சாதி?

காதல் செய்து காமம் பெறும் மனோதத்துவ நிபுணர்களே,
நாற்பது வயதில் உங்களின் இரவு என்ன நிலை?

தேநீர் கோப்பையுடன் செய்தித் தாள் புரட்டும் அரசியல் அறிஞர்களே,
வரும் தேர்தலில் ஒரு வாக்குக்கு என்ன தகும்?

வேர் பிடுங்கி செங்கல் நடும் இயற்கை விரும்பிகளே,
கடைசியாக நீங்கள் ரசித்த மழைக் காலம் என்ன ஆண்டு?

சட்டை பையில் வெள்ளை புறாக்களுடன் அலையும் புகைவண்டி ஓட்டுநர்களே,
நீங்கள் விட்ட புகை தூது பறப்பது என்ன கிரகம்?

தன்னை நாடுவோரை அடிமையாக்கும் அதிகார ஆண்டவர்களே,
நீங்கள் எதிர்பார்ப்பது என்ன அபிசேகம்?

தொழிலாளிகளின் குருதி நிரப்பி நீச்சல் பழகும் முதண்மையான முதலாளிகளே,
உங்களின் கொள்ளுப் பேரனின் மீது என்ன அக்கறை?

வெறி பிடித்து இனம் கொல்லும் மனிதநேய மாந்தர்களே,
உரிமையோடு வாழ்வதில் என்ன குற்றம்?

எழுதியவர் : ஜெகன் பிரகாஷ் (20-Nov-15, 9:48 am)
சேர்த்தது : ஜெகன் பிரகாஷ்
Tanglish : moodar kootam
பார்வை : 66

மேலே