கனவுக்காரிக்கு சில வரிகள்- சந்தோஷ்
சிலையாகவே இரு.
நானுன் அழகாகி விடுகிறேன்.
நீ மரமாகவே இரு
நானுன் தென்றலாகிவிடுகிறேன்.
நீ பாலைவனமாகவே இரு..
நானுன் வெப்பமாகிவிடுகிறேன்.
நீ நீயாகவே இரு
நானுன் உயிராகிவிடுகிறேன்.
--
உன் தேகமெனும் இல்லத்தில்
குடியிருக்க விரும்பும்
என் விரல்கள்....!
என் மோகமெனும் நெருப்பில்
குளிர்காய வேண்டும்
உன் இதழ்கள்...!
உன் பெண்மையெனும் அரவணைப்பில்
ஆறிப் போகவேண்டும்
என் துயரரணங்கள்
--
நேற்றிரவு
நமது காமத்துப் போர்
ஒத்திகையில்
வலித்திருக்கும் நம்
காதல் கட்டிலுக்கு..!
பாவம் விட்டுவிடுவோம்..
அரங்கேற்றத்தை
எங்கு தொடங்கலாம் ?
காதல் மன்னன் தோட்டத்திலா ?
காமத்தேவன் மாளிகையிலா ?
உனது தீர்மானம்
எனது நிறைவேற்றம்.
--
எந்தன் நெஞ்சில்
மோகமோ நெருப்பாக..!
அதை அணைத்திடும்
தீர்த்தமே உன்னிதழாக..!
--
பல நேரம் நீ...
நிவாரணம் தரும் வேளையிலும்
தேர்தல் பிரச்சாரம் செய்யும்
தமிழக முதலமைச்சரைப்
போலவே நடந்துக்கொள்கிறாய்..
அடியே. என் தேவதையே..!
நீயெனக்கு புரட்சித் தலைவியல்ல
காதல் காவியத்தலைவி...!
--
இராத்திரி நீதிபதியாய்
உனக்கு நானிருப்பேன்
வா... என் மாதவியே..!
மோகச் சேதாராமாகிய
உந்தன் கட்டழகிற்கு
காமமெத்தைச் சபையில்
தீர்வுக் கூறுகிறேன்.
--
நேற்றிரவு என்
யாக்கை கோட்டையெங்கும்
ஒரே காமத்தீ....
கொளுத்தியது நீ...!
அன்பே....!
உன் அசல் பெயரென்ன
கண்ணகியா ?
தீ மூட்டியது நீயென்பதால்
இந்தச் சந்தேகமெனக்கு..!
--
உன் நிழலும்
என் நிழலும்
யாருமற்றச் சாலையில்
உறவாடிய வேளையில்
நிழற் யுத்தம் நடந்திருக்கும்
காமத்துக்கும் காதலுக்கும்..!
--
மழையில் நனைந்த
உன் முந்தானையை
என் தலையில் கட்டினேன்.
பிடித்தது எனக்கு காமத் தோஷம்...!
--
என் சொந்த நிலத்தில்
மண் சுமந்து கட்டுவேன்
செல்லமே உனக்கான
நமது தாஜ்மஹாலை ....!
ஆம் நான அந்த
ஷாஜஹான் போல அல்ல...!
**
ஆடி மாதம் தவிர
மற்ற மாதங்களில்
ஆடைத் தள்ளுபடிதானே
கண்ணே
நமது மோக இராத்திரிகளுக்கு..?
அச்சோ..
வெட்கத்தை பாருங்களேன் இவளுக்கு....!
--
***
--இரா.சந்தோஷ் குமார்