மருதாணிக்காரி

நிலைக்கண்ணாடிக்கு
பொட்டிட்ட பின்
உன் முகம் கண்ணாடி....
-------------------------------------------

எல்லா எதிர்வீடுகளும்
தேவதைகளின் வாழ்விடமாகவே
இருக்கின்றன...
குறைந்த பட்சம் வந்து போகும்
இடமாகவாவதும்.....
----------------------------------------------

"பாதி விரல்தான் சிவந்திருக்கு"
என்று உன் அம்மா கேட்க,
வேக வேகமாய் சட்டை போட்டு
மறைத்த என் முதுகில்
பாதி மருதாணி....
-------------------------------------------------

இதழ் 'படித்த' வரிகள்
திரும்ப திரும்ப
முணு முணுக்கின்றன...
-------------------------------------------------

போகிற போக்கில்
இடித்து விட்டுப் போவதில்
உன் தாவணி மொட்டுக்கள்
என் சட்டையில்
பூக்கின்றன....
-------------------------------------------------

இன்னும் கொஞ்ச நேரம்
என்று மார்புக்குள் முகம்
புதைத்து
நீ தூங்குவதில்
முடிகிறது
இந்த தீபாவளியும்....
----------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (21-Nov-15, 2:08 pm)
பார்வை : 106

மேலே