குலசேகர பட்டினம்
செல்லும் இடம் எல்லாம்
செப்படி வித்தை போல்
செம் பொருள் ஈட்டி
செகம் இதை ஆண்ட
செந்தமிழன் அவன்
செப்பிய மொழியே
செம்மொழி தமிழாம்!
செம்மொழி பேசிய
சேரனும் சோழனும்
பண்டொரு பாண்டிய
மன்னனின் குடியாய்
சேவகம் செய்திடும்
வண்ணம் ஆண்டவன்
கயலதை கொடியில்
பொறித்துக் கொண்டவன்
குலசேகர வர்மன் எனும்
பாண்டிய மன்னனாவான்..
முதலாம் நூற்றாண்டில்
பதமாய் மீன்வளம்
முத்துச் செல்வமும்
மூழ்கிக் கிடைத்ததை
முன்னொரு தோணியில்
சின்னமாம் வணிகம்
இலங்கை, உரோமை
கிரேக்க அரசுடன்
நித்தியம் நடத்தினான்
கத்தியை ஏந்தாமல்
கடலதை வென்றான்..
யார்க்கும் வழிவிட்டு
வாழவே வைத்திடும்
நல்ல நாடு இதுவென்று
தனது குறிப்பேட்டில்
மார்கோ போலோ
அவனும் சொன்னான்
வங்கக் கடலின்
தங்கக் கரையோரம்
வளைந்து இருப்பது
வளையாத செங்கோல்
நிலமது நெய்தல்
ஆயினும் குலத்தில்
முத்துக் குளிப்பதே
தொழில் என்றான்.
.
செந்தில் நாதன்
அரசினை ஓச்சும்
திருச் செந்தூரின்
அருகினில் அமைந்து
பகவதி அம்மன்
பாலித்து அருளும்
கன்னியா குமரிக்கு
எழுபது கல்தொலைவில்
சித்தம் வைத்து
பத்தரைக் காக்கும்
முத்தாரம்மன்
மூவுலகாளும்
பட்டினம் இதுவென்றே
மூக்கினில்
விரல் வைப்பார்
பின் தாக்கத்தில்
கை தொழுவார்!.
மேக இரவிக்கையை
மேலே அணிந்து
சிகர தனங்கள்
சிலிர்த்து எழுந்திட
வேகங் கொண்டு
வேலினை எடுத்து
சூரனை சங்காரம்
செய்வதை நேரில்
யாரும் காணலாம்
பாரில் நல் காட்சியாம்.!
சித்தினி அத்தினி
பத்மினி சங்கினி
அத்தனை பேரும்
முத்தினைத் தேடும்
சித்திரக் கூடமது
நித்திலப் பொன்
மாடம் இது.
கத்தூரி குங்குமம்
மஞ்சள் சந்தனம்
மேனியில் பூசிய
மாதரார் அங்கு
நீராடி எழுகையில்
வீசிடும் காற்றில்
நெல்லும் கரும்பும்
சோளமும் கம்பும்
போராடித் தீர்க்கும்
தம்வாசம் தோற்கும்
வையமாம் இது
மாயன் வடிவு ஆயின்
அவனது உந்திக்
கமலமாம் பாண்டி
நாட்டின் நதிகள்
மொட்டென மலர்ந்து
முத்தமிழ் பேசும்
மரக்காயர் வீட்டிலும்
ராவுத்தர் ஏட்டிலும்
கிறித்துவர் வந்து
பரிவு இரக்கமாய்
பாங்குடன் சேவை
செய்து வந்திடும்
அழகிய நகரமிது
துறை முகங்களில்
முதன்மை இது!.