விடுதலை வேண்டாம்
வந்ததில்லை வாழ்வில்
வண்ணமான பொழுதுகள்
வரும் முன் நீ என்னிலே!
கண்டதில்லை மண்ணில்
கலையாத மோட்சம்
கரையும் முன் நீ என்னிலே!
சாய்ந்ததில்லை இப்படி
சட்டென்று என் மனம்
சந்திக்கும் ஒரு நொடியிலே!
சோர்ந்ததில்லை இப்படி
சோகத்தில் என் மனம்
சிந்திக்கும் மறு நொடியிலே!
தனிமையின் சிறைகள்
தந்ததில்லை இத்தனை
தவிப்புக்கள் என் மீதிலே!
விழி இரண்டும் இங்ஙனம்
வடித்ததில்லை விழி நீர்
வலிகளால் வரி மீதிலே!
பாவையிவள் வேண்டிடும்
பார்வைகள் யாவும்
உன்னிடம் மட்டுமே!
பாதை மாறி சென்றாலும்
போகும் இடம் யாவும்
உன் முகம் காட்டுமே!
காதல் என்னும் வடிவிலே
கலந்திட்ட நீயே - என்
கண்ணோடு விம்பமாகவே!
நேசம் என்னும் நதியாய்
நிறைந்திட்ட நீயே - என்
நெஞ்சோடு ஜீவனாகவே!
விடாமல் தொடரும் உன்
நினைவுச் சிறையில்
விரும்பியே கைதியாவேன்!
விடுதலை தர - நீ
எண்ணிவிட்டால் - நானோ
வெந்து தான் சாம்பலாவேன்!..