கைக்குட்டை

இத வச்சு என்ன பண்ணபோற?-எனக்கு
இதுதான் வேணுமென உன்னிடம் நச்சரித்து
வாங்கிவந்த உன் கைக்குட்டையிடம் பேசிஇருக்கிறேன்.
எப்போதாவது நீ சீக்கிரம் தூங்கிவிடும்போது
அதனோடு பேசி இருக்கிறேன்.
எப்போதாவது அதிகநேரம் நாம் பேசி முடித்தபின்
அதனோடு பேசி இருக்கிறேன்
எப்போதாவது நாம் ஒன்றுமே பேசாதபோதும்
அதனோடு பேசி இருக்கிறேன்.
நீ அதிகம் சிரித்த நாட்களில்
அதனோடு பேசி இருக்கிறேன்.
நீ அதிகம் கோபப்பட்ட நாட்களில்
அதனோடு பேசி இருக்கிறேன்.
உன் உள்ளங்கை வியர்வையை விட
பின்னங்கழுத்தின் வியர்வையை அது ருசி கண்டிருக்கிறது.
உன் உதடுகளை விட்டு உதற மறுத்த
சில சோற்று பருக்கைகளை அது ருசி கண்டிருக்கிறது.
உன் பவுடர் வாசனை அதற்கு பிடித்திருக்கிறது.
நான் உன்னை கண்ணீர் வராமல் அழவைத்திருக்கிறேன் என
என்னிடம் சொல்லி இருக்கிறது.
உன்னை கண்ணீர் வரும்படி சிரிக்கவைத்திருக்கிறேன் என
என்னிடம் சொல்லி இருக்கிறது
உன் கோபம் அந்த கைக்குட்டை பூக்களை
கருகவைத்திருப்பதாக சொல்லி இருக்கிறது
உன் வெட்கம் இன்னும் சில பூக்களை பூக்க வைத்திருக்கிறதாம்..
உன்னை ரசிக்கும்போது நானாக மாறிக்கொள்வதாக சொல்கிறது
நீ ரசிக்கும்போதும் நானாக மாறிக்கொள்வதாக சொல்கிறது.
நான் முத்தமிடும்போது உன் கைகளின் அழுத்தத்தில்
செத்துப்பிழைப்பதாக சொல்கிறது.
என்னிடம் ரசிப்பதற்கு ஏதுமில்லையே என என்
கைக்குட்டைக்காக பரிதாபம் கொள்கிறது..
ரசிப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை என
என்னை கேலி செய்கிறது.
.நான் உன்னிடம் சொல்லாததை எல்லாம்
சொல்லிக்கொண்டிருக்கிறது அந்த கைக்குட்டை.

எழுதியவர் : Buhari (26-Nov-15, 3:31 pm)
Tanglish : kaikuttai
பார்வை : 262

மேலே