இவ்வளவுதானா - 3

ஏகனா யிருக்க வெண்ணாது பெரு வீடடையும்
வழியை நாடி பிரிந்து, சென்றவனும்
சேர்ந்திடவோர் புகலிடமாய் மருள் நீக்கும்
குருவடியாய் மலர்ப்பாதம் ஒன்று விதிப்பயனால்
வாய்த்ததுவே ஞான குரு எதிர்வந்து நின்றதனால் !

பரிபாலனஞ்செய்யும் மன்னனவன் மாண்டபின்னே
முறையாக பட்டத்தை அலங்கரிக்க இளவல் இன்றி
துயருற்ற மக்களுக்கு செம்பொன் நிறைமணி சூடியோர்
யானையும் ,ஊர்நடுவே ஓய்ந்திருந்த பிள்ளையொன்றை
மாலைசூட்டி மன்னனிவன் என்றே கட்டியம் கூறுதற்போல்
கல்லாய்,பேயாய், கணங்களாய், பல்விருகமாகிப்
பறவையாய், பாம்பாய், புழுவெனெ, நாயிற் கடையாய்
கிடந்தவனை அரிதெனக் கூறிடும் மானிடப் பிறவி நீ
அடைந்ததே முதற் பேறு என்ற குரு,

பாலகனாய் இருந்த நாள் முதலாய் நினது நெஞ்சம்
ஏங்கியவை எதற்கெல்லாம் என்று கேட்க, இவனும்
தன் நினைவுப் பாதைதனில் நடந்து செல்ல தலைப்பட்டான்..
பள்ளியில் கல்வியில் மற்று விளையாட்டினில் யாவிலும்
இன்னொருவன் வெல்வது போல் வென்றிடவும்
இயன்றவரை அவனையும் மிஞ்சிடவும் ஏங்கியது துவங்கி
விருத்தனாய் ஆனபின்னே வேல்விழியார் கவனத்திலே
நிறைகின்ற வீரனென மாறிடவும் ஏங்கியதுண்டு
பொருள் ஈட்டுதற்கு புதுவழிகள் போந்தபின்னே
ஊரில் இவன் போல யாருண்டு வென பலதலைமுறைக்கு
பொருள் சேர்க்க ஏங்கியதுண்டு ; பாவங்கள் புரிந்ததுண்டு
அன்றேனும் பல போட்டிகள் போட்டதுண்டு ..
குன்றாப் புகழுக்கும் அழியாப் பெயருக்கும் ஏங்கியதுண்டு
எண்டிசையும் இவன் பெயர் சொலவும் செய செய வென
பேரிகைகள் முழங்கிடவும் கூட ஏங்கியதுண்டு..
இன்னும் பல இருக்கின்றதே சொல்லிடவா என்றவனை
இத்தனை ஏக்கத்திலும் எத்தனையில் நீ மானிடனாய் இருந்தாய்
என்ற குரு , நில்லு கண்ணப்ப என்பது போல் நிமிர்ந்து பார்த்தார்!

(இன்னும் வரும்)

எழுதியவர் : பாலகங்காதரன் (26-Nov-15, 3:43 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே