எழுவீர் தமிழ்காக்க

இளைஞர்களே இன்றேநீர் எழுந்து வாரீர்!
இணையில்லாத் தமிழ்மொழியின் நிலையைப் பாரீர்!
களைநீக்கி நெற்பயிரைக் காத்தல் போலே
விளைந்துள்ளத் தடைகளையே தகர்க்க வாரீர்!

குன்றெனவே வளர்ந்துள்ளத் தமிழை நாட்டில்
குழியினுள்ளேத் தள்ளிவிடும் நிலையைக் காணீர்!
விழித்திடுவீர் புறப்படுவீர் தமிழைக் காக்க
பழியில்லாப் பைந்தமிழின் அழிவைப் போக்க

வெளுத்திடவே நடையெடுப்பீர் தமிழர் நெஞ்சை
கொளுத்திடவே அடியெடுப்பீர் அடைக்கும் பஞ்சை
தொல்புகழே அடைந்துள்ளத் தமிழைத் தூக்க
கொல்புலியாய் மாறிடுவீர் புகழைத் தேக்க

படுகுழிகள் தூர்த்திடவே படையைக் கூட்டு
இடும்பைபல வரும்நேரம் வைப்பாய் வேட்டு
குடும்பத்துச் சூழ்நிலைகள் தடுத்திட வந்தால்
உடும்பாகி உன்கொள்கைப் பிடித்துக் காட்டு

தலைகீழாய்ப் படித்தாலும் தமிழின் பெருமை
தரணியிலே பிறமொழிக்கு இருப்ப துண்டோ?
இயற்கைத்தந்த இனியமொழி தமிழ்தான் அன்றோ?
இனியும்நாம் உறங்கிடுதல் பிழைதான் நன்றோ?

பெற்றதாயின் பெருமைதனைக் காத்து நிற்றல்
உற்றதொரு ஆண்மகனின் கடனே அன்றோ?
வல்லமையைக் கொண்டேநீர் வண்டமிழும் வாழ
வெல்லவேண்டும் வாளேந்தி தமிழ்ப்பகையும் வீழ

முன்னைமொழி முடங்கிவிடும் நிலையதைனக் கண்டு
முனகிஉள்ளே மூலையிலே முடங்கிடுதல் ஏனோ?
ஓடிவாரும் உம்மோடும் பலபேரைச் சேர்த்து
நாடிடுவீர் தமிழுயர்த்த கைகளையேக் கோர்த்து

பின்தோன்றி உருவான மொழிகள்பல மண்ணில்
முன்வந்தத் தமிழ்மொழியைத் தாழ்த்திடுதல் முறையோ?
என்னஇது தமிழாநீ பண்ணுவது சரியா?
இன்னும்ஏன் தாமதமே? எழுவீர்தமிழ் காக்க!

எழுதியவர்
பாவலர்.பாஸ்கரன்

எழுதியவர் : (28-Nov-15, 2:55 pm)
பார்வை : 46

மேலே