அழகி அடி நீ
மையல் விழிகளை
மஸ்காரா தும்மலால்
ஒற்றை மைக்கீறலாய் - ஏன்
உருக்குலைக்கிறாய்
ததும்பி வழியும்
அரும்பு இதழ்களை
சாயத்தால் தோய்த்து - ஏன்
மேய விடுகிறாய்
நெடுவான வில் புருவத்தை
இடுக்கியால் புடுங்கி
குறுக்கி நிமிர்த்தி - ஏன்
கொந்தல் ஆக்குகிறாய்
சூடேற்றிய காது மடல்களை
சுக்கான்களால் இடித்து குடைந்து
ஓட்டையில் ஒன்பதை நுளைத்து - ஏன்
உணர்ச்சியை கிழிக்கிறாய்
செம்பாட்டு மா கன்னத்தை
செளிம்பு பூசி கனிந்த மாங்கனியாய்
செம்பவுடர் தடவி - ஏன்
சீரழிக்கிறாய்
தோகையாய் விரித்த
வாகை மலர்மயிரை சுருட்டி சூறையாடி
அழுத்தி நிமிர்த்தி - ஏன்
அரைத்தும்பு ஆக்குகிறாய்
கஞ்சனா அந்த
பிரம்ம பிரபஞ்சன்
கொஞ்சம் குறுக்கலாய்
கிறுக்கி விட்டுப் போக
வஞ்சகம் இன்றியே
வார்த்து விட்டிருக்கிறான்
அழகி அடி நீ - அடி வருடி
அடங்கா பிசாசு ஆகாதே