மதம் என்பது அன்பு
மதங்களின் அடிப்படை அன்பு-அதை
மறப்பதால் வருவதோ வம்பு
உதவுதல் என்பதே நல்மதம்-அந்த
உண்மையை மறந்தால் ஏதுஇதம் ?
மதங்கள் பலவாய் ஆகலாம்-அதில்
மடமைகள் புகுந்து ஆளலாம்
மானூடம் உயர்ந்திடப் பாரு -அந்த
மனதுடன் உண்மையைக் கூறு.
மதத்துடன் மதமும் பகையாம்-அதில்
மண்டிக் கிடப்பதோ புகையாம்
அதர்மம் அழித்து மகிழு -அந்த
இனிமையில் உள்ளமே நெகிழு.
மதமே மதத்தைப் பழிப்பதா? -பின்
மனிதனே மனிதனை அழிப்பதா?
மதங்கள் சொல்வதோ ஒழுக்கம்-அது
மலர்ந்திடின் உள்ளமும் வெளுக்கும்.
ஒன்றே இறைவன் ஆகும்-அதை
ஒதுக்கிடின் நிம்மதி போகும்
ஒன்றே மானுடர் குலமாம்-அதை
உணர்ந்தால் என்றும் நலமாம்.
மனிதனை மனிதன் கொல்லும்-கொடும்
மடமையை ஏதிங்கு வெல்லும்
வாழ்வதும் தடம்மாறிச் செல்லும்-கொடும்
வறுமையும் பற்றியே கொள்ளும்.
பொதிகை மு.செல்வராசன்