அன்னை
அலாரம் வைத்து எழுந்தால் என்ன
அலுத்துக்கொள்வேன் மகனிடம்
அதிகாலை பரபரப்பிலும் மறக்காமல்
அறிவுறுத்துவேன் வேண்டியதை எடுத்துச்செல்ல!
எடுத்துச் செல்லும் காலை உணவு உண்ணாமல்
வரும் போது வருத்தம் மிகுதியில் கடுஞ்சினம் கொள்வேன்
தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுத்தாலும்
மனநிறைவு இல்லாது ஆதங்கம் கொள்வேன்!
மேசையில் ஏன் இவ்வளவு அலங்கோலம்
தினம் ஒரு முறை கடிந்துக்கொள்வேன்
ஒழுங்காய் வைத்தால்தான் விளையாட்டு
என்று அறைகூவல் விடுவேன்!
இன்று வெளிநாடு சென்று விட்டான் மேல்படிப்புக்கு
ஆனால் இன்னும் கோபிக்கிறேன்
வாட்ஸ்அப்பில் என் செய்திக்கு பதில் இல்லை என்று
அலுத்துக்கொள்கிறேன் அலை பேசியை எடுக்கவில்லை என்று!
கவலை கொள்கிறேன் உணவை உண்ணுகிறானா என்று
தவிக்கிறேன் தனியே இருக்கிறானே என்று
பதற்றம் கொள்கிறேன் உடல் நலம் பேண வேண்டுமேயென்று
ஏக்கம் அடைகிறேன் அவன் அருகில் இல்லையே என்று
இத்தாயின் மனது தனயனுக்கு புரியுமா?
எதை செய்தாலும் பின்சென்று அறிவுறுத்தியது
நேற்படுத்தமட்டுமல்ல அருகில் இருக்கவும்தான் என்று?
அவன் அறிவானா என் உலகம் அவன்தான் என்று ?