பேய்மழை
பேய்யெனப் பெய்த மழை
பாவலர் கருமலைத்தமிழாழன்
நிலமெங்கே வயலெங்கே வீதி எங்கே
----நின்றிருந்த வீடெங்கே மரங்க ளெங்கே
நலம்கேட்டுப் பக்கத்தில் வாழ்ந்தி ருந்த
----நண்பரொடு சுற்றத்தார் எங்கே எங்கே
வலம்வந்த காற்றேநீ வன்ம மாகி
----வாரிவந்து பேய்மழையாய்க் கொட்டித் தீர்த்துக்
குலம்முழுதும் இலங்கையிலே அழித்த போல
----குடியிருந்த பகுதிகளை அழித்து விட்டாய் !
கடலூரைக் குரங்கின்கை மாலை யாக்கிக்
----காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை தன்னில்
நடனமென ஊழிக்கூத் தரங்க மேற்றி
----நகரத்தைத் தீவாக்கி மிதக்க விட்டாய்
படகுதனில் மீட்புபணி பறந்து வானில்
----பசிக்குணவைப் பொட்டலமாய்ப் போட வைத்தாய்
நடமாடும் இடங்களினை மூழ்க வைத்து
----நாள்வாழ்வை அந்தரத்தில் தொங்க விட்டாய் !
எதற்கிந்த பெருங்கோபம் எல்லாம் உன்றன்
----ஏரிகளை மனைகளாக்கி விற்ற தாலா
மதகுடைய ஏரிகளைத் தூர்வா ராமல்
----மழைநீர்நீ செலும்வழியை அடைத்த தாலா
வதம்செய்வாய் என்பதினை ஆட்சி யாளர்
----வணிகர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்
மதயானை தனையடக்கும் அங்குச மாக
----மாற்றுவழி செய்திடுவர் அமைதி கொள்வாய் !