அமுதசுரபி விக்கிரமன்

( முதுபெரும் எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு கவிதாஞ்சலி )
அருந்தமிழாய் வாழ்வார் அமுதசுரபி விக்கிரமன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

எழுதுவது தவமென்றே நாளும் நாளும்
---எழுத்தெண்ணி எழுதிட்ட தூய ஞானி
உழுகின்ற உழவன்போல் மக்கள் நெஞ்சில்
---உயர்கருத்தை விதைத்திட்ட எழுத்து மேதை
விழுந்திட்ட எழுத்தெல்லாம் சமுதா யத்தை
---வீழாமல் காக்கின்ற விழுதின் ஆலம்
தொழுகின்ற எழுத்துகளைத் தொய்வே யின்றித்
---தொடர்ந்திங்கே கொட்டிட்ட அமுதசுரபி !

வாழ்க்கைக்குப் பொருளொன்றே குறிக்கோ ளென்று
---வாழ்கின்ற பேராசை மனித ருக்குள்
வாழ்வதிலும் பொருளிருக்க வேண்டு மென்று
---வாழ்வறத்தில் வாழ்ந்திட்ட தூய செம்மல் !
வாழ்க்கையினைச் செம்மையாக்கும் மனித நேயம்
---வழங்குகின்ற நெஞ்சினனாய் சங்க கால
வாழ்வுநெறி தம்வாழ்வில் கடைபி டித்தே
---வாழ்ந்திட்ட இலக்கியத்து இமய வெற்பு !

வரலாற்றுக் கதைசொல்லி வரலா றாக
---வாழ்ந்திட்ட கல்கியவர் அடியை யொற்றி
வரலாற்றுப் புதினங்கள் தொடர்ந்த ளித்து
---வரலாற்றை வாழவைத்த வந்தியத் தேவன் !
வரலாற்றுச் சாதனையாய் ஐம்ப தாண்டாய்
---வற்றாத அமுதசுரபி ஆசா னாகத்
தரமான இலக்கியத்தின் ஏட்டைத் தந்து
---தமிழர்தம் மனம்நின்ற எழுத்து வேந்தன் !



சொந்தமெல்லாம் எழுத்தென்றே துன்பம் வந்து
---சொந்தமென்றே அனைத்தபோதும் துவண்டி டாமல்
நந்தவனம் கவியிதழை மரபுப் பாட்டின்
---நலிவகலத் தந்திட்ட நற்றமிழ்க் கவிஞன் !
தந்திரங்கள் பலசெய்து காசிற் காகத்
---தம்மெழுத்தை விபச்சார மாக்கும் நாளில்
சிந்தனையைத் தூண்டிவாழ்வைச் செம்மை யாக்கும்
---இலக்கியப்பீடம் வழங்கிட்ட எழுத்துப் பீடம் !

அறுபதிற்கும் மேற்பட்ட அருமை நூல்கள்
---அருந்தமிழின் அன்னைக்கே அணியாய்ப் பூட்டிப்
பெருமையினைத் தமிழ்க்களித்த நற்கதை நம்பி
---பெயர்பெற்ற சரித்திரத்துக் கதையின் செம்மல் !
சிறுகதையின் சேக்கிழார் கபிலர் விருது
---சிறப்பான கலைமாமணி எனுப்பட் டங்கள்
பெருமையுடன் பெற்றகங்கா புரிகா வலனாம்
---பேர்பெற்ற நந்திபுரத்து விக்கிர மன்தான் !

எழுச்சிப்பா பாரதிக்கே ஆண்டு தோறும்
---எட்டயபு ரத்தினிலே விழாவெ டுத்தோன்
எழுத்தாளர் வாழ்வுயர்த்தும் சங்கத் தலைவன்
---எழுத்தாளர் நலநிதியின் அருமைக் காவலன்
ஒழுக்கத்தின் ஒப்பற்ற சீலன் ! அன்பால்
---ஒருங்கணைத்து உதவிட்ட ஈர நெஞ்சன்
பழுதுரைக்க முடியாத எழுத்துச் சிற்பி
---பண்தமிழின் புகழாக என்றும் வாழ்வார் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (2-Dec-15, 6:57 pm)
பார்வை : 93

மேலே