உடன்குடி

எங்கள் ஊரிலிருந்து
தென்திசை நோக்கி
பயணப்பட்டால் ,
ஒன்றிரண்டு
குட்டித் தூக்கம்
போட்டு முடித்து
கண் விழிக்கும்
நேரத்தில் வந்துவிடும்
உடன்குடி.

கற்பனை செய்யுங்கள் !
நீங்கள்
உடன்குடியில் வசித்தால் ,

ஊரின் பெயர்க் காரணம்
யாராவது கேட்டால்,
திருதிருவென முழிக்காமல்
"உட காடாய் கிடந்த
இடத்தில் மக்கள்
குடி அமைத்து
வாழ்ந்ததால் வந்த
பெயரே 'உடன்குடி' "
என ஆயிரம் கதைகள்
அசால்ட்டாய் சொல்லலாம் !

பருப்பைப் போல்
ஒருநாள் கரும்பு
விலை ஏறினாலும் ,
சீனியில்லா காபியை
அனைவரும்
ஏற்றுக்கொண்டாலும் ,
டீ, காபியை
மறந்தாலும் ,
டீ மாஸ்டர்களெல்லாம்
துறவு பூண்டாலும் ,
கவலை ஏதுமின்றி
தித்திக்கும்
கருப்பட்டி போட்ட
கடுங்காப்பி குடிக்கலாம் !

சேட்டை செய்யும்
பிள்ளைகளை
சாட்டை நீள
முருங்கைக்காயால்
ஒரு செல்ல அடி
அடிக்கலாம் !

வலிக்காமலே அழும்
குழந்தைக்கு
அதே முருங்கைக்காயில்
வகை வகையாய்
உணவு செய்து
கொடுக்கலாம் !

கோடை காலத்தின்
வெப்பம் தவிர்க்க
காலை எழுந்தவுடன்
பதநீர் பருகலாம் !
மதிய வேளையில்
நிறைய நுங்கு
உண்ணலாம் !

வாரம் ஏழு நாளும்
தெவிட்டும் வரை
தேங்காய் திண்ணலாம் !

கத்திரி வெயில்
மண்டை பிளக்கும்
நேரத்திலும் ,
இளநீர் குடித்துவிட்டு
இளந்தேங்காய் கூட்டால்
சூரியனின் மண்டை
உடைக்கலாம் !

போரடிக்கும் போதெல்லாம்
பனவெல்லம் கொறிக்கலாம் !
பனங்காய் உரிக்கலாம் !

வெற்றிலை இடித்துக்கொண்டே
வீண் வாதங்கள் செய்யலாம் !

தை மாதத்தை
பனங்கிழங்கு கொடுத்து
வரவேற்கலாம் !

அம்மாவுக்குத் தெரியாமல்
எடுத்த,
சில் கருப்பட்டியையும் ,
புட்டு கருப்பட்டியையும்
பனைஓலை பெட்டிக்கு
மூடி போட்டு
ஒளித்து வைத்து
திண்ணலாம் !

மின்சாரம் ஆடும்
கண்ணாமூச்சியில்
ஒளிந்துகொண்ட காற்றுக்கு
பனைஓலை விசிறியால்
'ஐஸ்பால்' அடிக்கலாம் !

எல்லா ஊர்களைப் போலவே
அனைத்து மத
வழிபாட்டு தளங்களும்
உடன்குடியில் உண்டு !
தண்ணீரில் தத்தளிக்கும்
பகுதிகளுக்காய்
கண்ணீருடன் வேண்டலாம் !

கற்பனை முடிந்தது !

நிஜத்திலும் உடன்குடிக்கு
உடனே வர
மனம் ஆசைக்கொள்ளுதா ?

வேளாண்மை முதன்மை
தொழில் என்பதாலும் ,
அனல் மின் நிலையம்
அமைக்கும் பணி
வழக்கம் போல்
தாமதிக்கப்படுவதாலும்,
இப்போதைக்கு
சுற்றுச் சூழல் மாசுபாடு
பற்றி அச்ச்சமேதுமில்லை !

கூடுமானால் ,
வருகை புரியுங்கள்
'உடன்குடிக்கு'

எழுதியவர் : அனுசுயா (3-Dec-15, 9:21 pm)
பார்வை : 200

மேலே