முடியட்டும் பெருமழை விடியட்டும் சென்னைக்கு
மாலையிட்ட மணாளனை
குங்குமமிட்ட குணாளனை
தாரமாக்கிட்ட தயாளனை
ஏக்கமுடன் எதிர்நோக்கும்
நிலைகொள்ளா இந்நிலவு !
இரயிலேறி பயணித்தவன்
இருதினம் கடந்தபின்னும்
இருள்நீங்கி விடிந்தாலும்
இதுவரை காணாததால்
இருண்டது மதிமுகமும் !
பணிநிமித்தம் சென்றவன்
சூழ்ந்திட்ட வெள்ளத்திலே
தவிக்குதோ தன்னுயிரும்
என்றெண்ணி தகிக்கிறது
குளிர்நிலவின் நெஞ்சமும் !
அதிகாலை கடந்தும்
அந்திவேளை முடிந்தும்
காணாத கவலையால்
அலங்கரித்த பெண்ணரசி
கலக்கத்தின் விளிம்பில் !
தேடிச்சென்ற தந்தையும்
சேதியேதும் கூறாததால்
வடிகின்ற வருத்தத்தால்
மலர்ந்திட்ட செங்கமலம்
வாடிவிட்ட நிலையிங்கு !
பொழிகின்ற பெருமழையில்
வழிந்தோடும் வெள்ளத்தில்
சிறிதேனும் கவனியாமல்
இடறியேதும் விழாதிடவே
கலங்குது நெஞ்சமிங்கே !
ஏரிகள்பல நிரம்பியதால்
வழிந்திடும் நீர்நிலையால்
ஆளில்லா சாலைகளும்
ஆறுகளாய் மாறியதால்
ஆற்றொண்ணா சோகமிது !
அடித்தது பேய்மழையும்
பிடித்தது சென்னையை
முடித்தது நினைத்ததை
வடித்தது பலவிழிகள்
கண்ணீருடன் செந்நீர் !
ஆறுதல்தான் கூறிடுவீர்
தேறுதல்தான் அடைந்திட
மாறுதலும் வந்திடுமிங்கு
மாற்றமும் தேவையிங்கு
மனசாட்சியும் பேசுமன்று !
முடியட்டும் பெருமழை
வடியட்டும் வெள்ளநீரும்
விடியட்டும் சென்னைக்கு
படியட்டும் கதிரொளியும்
மகிழட்டும் நம்மக்களும் !
பழனி குமார்
03.12.2015