சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை
தொடர்ந்துவரும் வேதனைக்கோ அளவே இல்லை !
எண்ணத்தில் சாக்கடையாய் வண்ணத்து அரசியலோ
எண்ணிக்கை பார்க்கிறது!- மக்கள்
எண்ணத்தை மறக்கிறது.
ஆகாய கோட்டைகளை அரசியலில் கட்டிஒரு
ஆதாயம் தேடுகின்றார்-ஒரு
அவசரத்தில் ஓடுகின்றார்.
வாக்குறுதி வாய்ப்பாட்டை வாக்களிக்கும் நாள்வரையில்
திக்கெல்லாம் சொல்லிடுவார்-நமை
திசைமாற்றி விட்டிடுவார்.
நாராக நைந்திங்கு நாறியே கிடந்திடினும்
சீராக்க நினையாது சீமானாய் வாழ்ந்திடுவார்-இன்னும்
சீரழிய வைத்திடுவார்..
நிறம்மாறும் கோட்பாடு,நிலைத்திடாத கட்டுப்பாடு
கொள்கையிலோ தட்டுப்பாடு-இதுதானே
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு!
வாக்காளா ! உன் வாக்குகளைப் பார்த்துப் போடு!
நீதிமன்றங்களில் நீதிகள் விலைபேசப் படுகின்றன
சாதிய அமைப்புகளோ சங்கடங்களை விதைக்கின்றன.
புதுமைகள் செய்யப்பட வேண்டிய காலத்தில்
பழமைகள் தூசித் தட்டப்படுகின்றன.
மூடநம்பிக்கைகள் எண்திசையும் கிளைபரப்பி
மூளைகளைச் சலவை செய்கின்றன.
ஏழைகளை ஏழைகளாகவே ஏங்கவைத்து
இழிவு படுத்துவதால்-இங்கு இலவசங்கள்
இன்னும் இனித்துக்கொண்டு இருக்கின்றன.
வீதிக்கு ஒரு கோவில் வைத்தோம்-தினம் தோறும்
விருந்தாக்கி கடவுளுக்கு நாம் படைத்தோம்-ஆனால்
வேதனை இருளுக்கு விளக்கேற்ற தவறிவிட்டோம்.
ஊர்கள் தோறும் கல்வி நிலையங்கள் வைத்தோம்-அதில்
போலித்தனங்கள் பொதிந்து கிடப்பதைப்
புரிந்து கொள்ள தவறிவிட்டோம்.
மனஆதிக்கம் வளர்க்காமல்
பணஆதிக்கம் வளர்ந்திட விட்டுவிட்டோம்.
குணங்களை எல்லாம் கோணியில் கட்டி
கடலினுள் எறிந்துவிட்டு
பிணங்களின் வாடையில் பரிதவித்துக் கிடக்கின்றோம்.
நடனமாடி நளினப்படுத்திய நதிகளின்
கால்களைக் கூட ஒடித்து விட்டோம்.
ஆணவத்தால் அணைகளைக் கட்டி
பொதுநலம் பேணிய நதிகளை எல்லாம்-இன்று
சுயநல கோட்டைக்குள் அடைத்துவிட்டோம்.
தாகத்திற்குத் தண்ணீர் தருவது
தர்மம் என்பது கூட –இன்று
அதர்மம் என்றாகிவிட்டது.
தாராள தண்ணீருக்கும் தட்டுப்பாடு
அதனால் தான் இத்தனை கட்டுப்பாடு.
பசித்தவனை முன்னால் வைத்தே
பாயாசம் உண்ண பழகி விட்டோம்.
காரணம்
இரக்க குணங்கள் மறைந்து
அரக்க குணங்கள் நம்மை
ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.
பாசங்கள் கூட இன்று பாசணமாய் மாறிவிட்டன.
பெற்ற பெண்ணே பெற்றவளின் தலையில்
கல்லினைத் தூக்கிப் போடுகின்றாள்.
உடன் பிறப்புகளின் உடம்பிலே
நெருப்பினை வைத்து உயிருடன் கொளுத்துகிறாள்.
சின்ன சின்ன வாதங்கள் கூட
வன்முறைக்கு வழி வகுக்கின்றன.
எங்கே போகிறோம் ? ஏன் போகிறோம் ?
என்பது தெரியாமல் போய்கொண்டு இருக்கிறோம்.
பெரியாரின் பகுத்தறிவு கொள்கை-இன்று
மரண படுக்கையில் தள்ளப்பட்டு விட்டது.
மகாத்மாவின் அகிம்சை மண்ணில்
புதைக்கப்பட்டு விட்டது.
புத்தனின் அன்பும் புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டு விட்டது.
அல்லாவின் அன்பும் ஆசையும்
அரக்கர்களால் கொள்ளையிடப்பட்டு விட்டன.
அறியாமல் செய்தவர்களை அன்பாலே மன்னித்த
ஏசுவின் தியாகமும் திசை தெரியாமல் அலைகின்றன.
அன்பே கடவுள் என்னும் கோட்பாடும்
வன்முறையால் வதைக்கப்படுகின்றன
படுகொலைகள் கூட இன்று
பகிரங்கமாக அரங்கேற்றப்படுகின்றன.
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை
தொடர்ந்துவரும் வேதனைக்கோ அளவே இல்லை !