மண்குகை
மண் குகை
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரம்.அன்று ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
விடுமுறையை எப்படிப் பயன் உள்ளதாகக் களிப்பது என்று காதனும்,லூயின்னும் அவர்களது நண்பர்களோடு ஆலோசனை நடத்தினார்கள். வெறுமனே நேரத்தைக் கழிப்பதை விட, ஏதாவது பயன் உள்ளதாகவும் அது இருக்கவேண்டுமென்றும் அவர்கள் விரும்பினார்கள். அப்படி ஒரு எண்ணம் உருவான போது தான் , அவர்களது நகரில் இருந்து மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டிற்குச் சென்று, அங்குள்ள மண் குகைகளை ஆராய்ச்சி செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.
எடுத்த முடிவை செயல்படுத்த விரும்பியவர்கள், லூயி காரில் செல்வதென்றும். அதற்குத் தேவையான பெட்ரோல். மற்றும் உணவுப் பொருட்களுக்குத் தேவையான பணத்தை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளவேண்டியது என்றும் முடிவு எடுக்கப்பட்டன. உடனே செயல்களில் இறங்கியவர்கள், கடகடவென்று எல்லாவற்றை ஏற்பாடு செய்துகொண்டு , சரியாக பத்து மணிக்குக் கிளம்பினார்கள். காரில் தேவையான அளவு உணவு வகைகள், தண்ணீர், கேமரா, டார்ச் லைட், மண்வெட்டி, கடப்பாரை, சிறிய கத்திகள், மூங்கில் குச்சிகள், அட்டைகள் முதலியவைகளையும் மறக்காமல் ஏற்றிக்கொண்டார்கள்.
ஒவ்வொருவருக்கும் மண் குகையைப் பற்றிய கற்பனைகள் அவரவர் மனத்தில் எழுந்துகொண்டிருந்தன.அதனால் ஏற்பட்ட பரவசத்தில் ஒவ்வொருவரும் மிதக்கத் தொடங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
‘ ஏண்டா? காதன் நீ இதற்கு முன்னாடி, இந்த மண்குகைகளைப் பார்த்திருக்கிறாயா?’
‘ இல்லைடா.. கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் சென்றதில்லை. ஒரு காலத்தில் இந்தக் குகைக்குள் புகுந்து மக்கள் காலான்கள் எடுத்து இருக்கிறார்கள். அந்தக் காலான்களுக்கென்று ஒரு தனியான சுவை இருந்ததால், அதற்கு மக்களிடையை நல்ல செல்வாக்கும் இருந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இப்போ யாரும் அங்கே செல்வதில்லையாம்.‘ என்றான் காத்தன்.
‘ஏனாம் ?’
‘இப்போ முன்னேப் போல் காளான்கள் வளருவதில்லையாம். அதுவும் இல்லாமல், இப்போ காட்டு விலங்களும் அவ்வப்போது வந்து உள்ளே தங்கி விடுகின்றனவாம். அதனால் யாரும் அங்கே செல்வதில்லையாம்‘
‘ஆமாண்டா … இந்தக் குகைகள் எப்படி உருவாகி இருக்கும்?’ என்றான் இன்னொரு நண்பன்.
‘அதனைத் தெரிந்து கொள்ளத்தானே நாம இப்போது செல்கின்றோம்‘ என்றான் காதன்.
‘எனக்கு என்ன தோணுதுன்னா.. ஒரு காலத்தில் இந்த மண்மேட்டில் மழை பெய்து ஓடிய தண்ணீர், மரத்தின் வேர்களுக்குள் புகுந்து ஓடி , ஓடி , எங்கோ தூரத்தில் இருந்த துளையின் வெளிய வர முயன்றபோது, மண்ணை அரித்துக் கொண்டு செல்லச் செல்ல இத்தகைய குகைகள் உருவாகி இருக்கலாம்.’
அதற்குள் அவர்கள் பார்க்க வந்த மண் குன்றுகளை கார் நெருங்கி விட்டது. காரை ஒரு ஓரமாக ஓட்டிச்சென்று நிறுத்தினான் லூயி.
எல்லோருடைய உள்ளங்களிலும் பயத்தோடு கூடிய, ஒருவித ஆச்சர்ய உணர்வுகள் எழுந்தன,
‘ டேய் தலையில ஹெல்மெட்டைப் போட்டுங்கோங்க… ஆளுக்கொரு டார்ச் லைட்டை கையில் எடுத்துக்கோங்க…’ என்று கூறிக்கொண்டே காரிலிருந்து இறங்கினான் காதன்.
காரிலிருந்து எல்லோரும் கீழே இறங்கி, தங்கள் கால்களில் முழங்கால் வரையிலும் வருமாறு அணிந்திருந்த ‘தோல் பூட்ஸை’ சரி செய்து கொண்டார்கள்.
‘என்னடா எல்லோரும் ரெடியா? ‘ என்ற காதன் முன்னால் நடக்கத் தொடங்கினான்.
குகை நன்கு உயரமாக, ஒரு ஆள் தலை குனியாமல் நடந்து செல்லும் அளவுக்கும், ஒரு கார் உள்ளே தடையின்றி செல்லும் வகையில் அகலமாகவும் இருந்தது.
‘ ஏண்டா காரிலேயே உள்ளே வரையிலும் போகலாம் போல் இருக்கே?’ என்றான் ஒருவன்.
‘போகலாண்டா .ஆனால் எதுவரைக்கும் போக முடியுமுன்னு தெரியலையே?. அதுவுமில்லாமல் உள்ளே சேறும் ,சகதியுமாக இருந்தா, கார் டயர் சேற்றில் மாட்டிக்கிடுதுன்னா அப்புறம் வம்பாப் போயிடுமே? . அதான் நடந்தே போயிடலாமுன்னு சொன்னேன் ‘ என்றான் காதன்.
எல்லோரும் உள்ளே புகுந்தார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு விதமான பதற்ற உணர்வுகள். பய உணர்வுகள். உள்ளே செல்லச் செல்ல செடிகளின் வளர்ச்சிகள் அதிகமாக இருந்தன. நிறைய கொடிகள் தொங்கிக் கொண்டும் இருந்தன. வெளிச்சமும் குறைந்து கொண்டே இருந்தது பின்பு இருட்டு மற்றுமே மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ள , அவரவர் தங்கள் டார்ச் விளக்கைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பாதையில் ஒரு வளைவு வந்தது.வளைவில் திரும்பி நடந்தார்கள்.
‘டேய்! கண்ணை நல்லாத் திறந்து பார்த்துக்கிட்டே வாங்க. நாலா பக்கமும் லைட் அடித்துப் பார்த்துங்கோங்க… ஏதாவது சிங்கம் , புலி ,கரடின்னு உள்ளே இருக்கப் போகுது…’ என்று எச்சரித்தான் லூயி.
இன்னும் உள்ளே சென்றார்கள். இப்போது பாதை வலது , இடது என்று இரண்டு திசைகளில் சென்றன.
‘பாதை இரண்டு பக்கம் போகுதே …நாம எந்தப் பக்கம் போறது? ‘ என்று ஒருவன் கேட்டான்.
‘டேய் ! இனிமே தான் நாம் ரொம்பக் கவனமாகச் செல்ல வேண்டும். போகப்போக இது பல கிளைகாளாகப் பிரிந்து போகக் கூடும்.திரும்பி வரும்போது எந்தப் பாதை வழியாக வரவேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும், பாதை தெளிவாகத் தெரியாமல் போகும் போது, மந்திரக் குகையிலே சுற்றிச் சுற்றி வருவது போல் , முடிவே தெரியாமல் தவிக்க வேண்டி வரும். எனவே சரியான பாதை எது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, ஏதாவது ஒரு அடையாளம் வைக்கவேண்டும் ‘
‘எதை அடையாளமாக வைப்பது?’ என்றான் ஒருவன்.
‘கவலைப் படாதே.. நான் அதற்குத் தயாராகத் தான் வந்திருக்கிறேன்..’ என்றவன் தனது பையினைத் திறந்து, அதில் இருந்து ஒரு பேப்பரும். ‘ஸ்கெட்ச்‘ பென்னும் எடுத்து, பேப்பரில் ஒரு அம்புக்குறி வரைந்து, ஒரு குச்சியை ஒடித்து, அந்தப் பேப்பரை குகையின் சுவரில் நன்றாகக் குத்தி வைத்தான்.
அவனது செயலைப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள், அவனது வேலை முடிந்ததும்,
‘டேய் ! எப்படிடா உனக்கு மட்டும் இந்த மாதிரி ஐடியாவெல்லாம தோணுது>; என்றான் ஒருவன்.
‘அதாண்டா காதன் ’ என்றான் மற்றொருவன்.
‘’சரி சரி! மேலே செல்லலாம்’ என்று கூறிக்கொண்டே காதன் முன்னே செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
சிறிது தூரம் சென்றவுடன் ,தனது காலில் ஏதோ தடுக்கவே , அதன் மேல் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான் லூயி.
‘டேய் காதன். இதோ பாருடா. மக்கிப் போன மூங்கில் கூடை’ என்று ஆச்சரியத்தோடு சுட்டிக் காட்ட எல்லோரும் உற்றுப் பார்த்தார்கள்.
‘இதெல்லாம் இங்கே எப்படிடா வந்திருக்கும்’ என்று கேட்டான் ஒருவன்.
‘முன்னெல்லாம் மக்கள் இதன் உள்ளே வந்து காளான் பிடுங்கிக் கொண்டு செல்வார்களாம்.அப்படி வந்தவர்கள் யாராவது இந்தக் கூடையை விட்டுட்டுச் சென்றிருக்கலாம்’ என்றான் காதன்.
குகையின் பாதை பல இடங்களில் இடது, வலது, நேர் என்று நாலாபக்கமும் பிரிந்து ,பிரிந்து சென்றன.எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் அடையாளம் வைத்துக் கொண்டே முன்னேறினார்கள்.
ஒரு இடத்தில் நின்று, குகையின் தரையினைத் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்வெட்டாயால் வெட்டிப் பார்த்தார்கள். மண் பாளம் பாளமாக இருந்தது.
‘பார்த்திங்களா? இது மழைத்தண்ணீர் ஓடி, ஓடி உண்டானது என்று சொன்னேன் அல்லவா? அதான் மண் பாளம் பாளமாக இருக்கிறது.இதோ பாருங்க தண்ணீர் அரித்த அடையாளம் ‘ என்று ஒரு இடத்தை காதன் காட்ட ,அதனை எல்லோரும் உற்றுப் பார்த்து ‘ உண்மை தான்‘ என்று ஒத்துக்கொண்டார்கள்.
இன்னும் சற்று உள்ளே சென்றவர்கள், பாதை பல திசைகளில் பிரிவதைக் கண்டு திகைத்து நின்றார்கள். எந்தப் பக்கம் செல்லலாம் என்று யோசித்தார்கள். டார்ச் லைட் வெளிச்சத்தைப் பரவச் செய்துப் பார்த்தார்கள்.
இடதுபுறம் திரும்பிய பாதையில் டார்ச் வெளிச்சத்தைச் செலுத்தியவன்
‘டேய்! டேய் ! அதோ பாருங்கடா.. ஏதோ தெரிகிறது‘ என்று கூச்சலிட, எல்லோரும் அந்தத் திசையில் தத்தமது டார்ச் வெளிச்சத்தைச் செலுத்தினார்கள்.
அந்தத் திசையில் எதுவோ இருப்பது தெரிந்தது.எல்லோரும் அந்தத் திசையில் முன்னேறினார்கள்.ஒவ்வொருவர் இதயமும் திக் திக் என்று அடித்துக் கொண்டிருந்தது.அருகில் செல்லச் செல்ல அது கண்ணுக்கு நன்கு தெரிய ஆரம்பித்த்து.
‘டேய் ! அது ஒரு கார் மாதிரி தெரியதுடா‘என்று ஒருவன் கத்தவே, உற்றுப் பார்த்த மற்றவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள்.அதற்குள் அனைவரும் கார் அருகில் வந்து விட்டார்கள்.
‘கார் !இங்கே வந்திருக்கிறது என்றால் ,யாரேனும் காருக்குள் இருக்க வேண்டுமே‘ என்று கூறிக்கொண்டே உள்ளே லைட்டை அடித்துப் பார்த்தார்கள்.யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
காரின் மேல் படிந்திருந்த தூசிகளைப் பார்த்த காதன்
‘கார். இங்கே வந்து பல நாட்களாக இருக்க வேண்டும் போல் தெரிகிறது.ஒரு வேளை உள்ளே வந்தவன் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் எங்காவது தவித்துக் கொண்டு இருப்பானோ? ஏன் காரை விட்டு விட்டு சென்றுள்ளான்‘ என்று சந்தேகக் கேள்விகளைக் கிளப்பினான்.
‘ஒரு வேளை எவனாவது காரோடு கடத்திக் கொண்டு வந்து , எங்காவது கொன்று புதைத்துவிட்டுச் சென்றிருப்பானோ?’ என்று ஒரு கிரிமினல் சாயத்தைப் பூசினான் இன்னொருவன்.
‘டேய் ! எவனாவது இருக்கிறானா என்று பார்க்கலாம்‘ என்று கூறிய காதன், டார்ச் லைட்டை அடித்து எல்லா திசைகளிலும் தேடிப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் தென்படவில்லை.
‘டேய் காதன். ஏதோ விபரிதம் நடந்திருக்கு.நாம உடனே காவல் துறைக்குத் தெரியப்படுத்துறது நல்லது.இல்லாட்டி நாமும் எதாவது வம்பிலே மாட்டிக் கொள்ள நேரிடும்‘ என்று லூயி கூறவே எல்லோரும் அதனை ஆமோதித்தார்கள்.
‘வாருங்கள் .இத்தோடு நாம் திரும்பிச் சென்று காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்‘ என்று காதனும் கூறவே, படு உற்சாகத் திகிலோடு வந்தவர்கள் , ஒருவித பயம் கலந்த உணர்வோடு ,தாங்கள் உள்ளே வரும்போது விட்டு வந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
வெளியே வந்தவர்கள், காரில் ஏறி நேரே நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று , தாங்கள் பார்த்தவைகளை விபரமாகக் கூறினார்கள்.
இதனைக் கேட்டதும் காவல் துறை உடனே செயலில் இறங்கியது. தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக் கமாண்டோ படைக்கும் தகவல் தெரிவிக்க, அடுத்த அரை மணி நேரத்தில் யாவரும் ஒன்று கூடினார்கள். அதற்குள் இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிக்கைக்காரர்களும் , தொலைக்காட்சி நிலைய நிருபர்களும் , கேமராக்காரர்களும் படை போல் வந்து சூழ்ந்து கொண்டனர்.
ஒரு பெரிய அணிவகுப்பு மண்குகையை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நகர காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர் தலைமையில் சென்ற அந்தப் படை , குகைக்கு முன்னால் சென்று நின்றது.
தனது ஜீப்பில் இருந்து குதித்த அலெக்சாண்டர் , எல்லாவற்றையும் கண்ணால் ஒரு முறை நோட்டம் விட்டார். அதற்குள் பத்திரிக்கை நிருபர்களும் , தொலைக்காட்சி கேமராக்களும் அவரை நோக்கி ஓடி வந்து, என்ன நடந்தது என்று அறியத் துடித்தார்கள்.அவர்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்த அலெக்சாண்டர் ‘தயவு செய்து ,இந்த ஆபரேசன் முடிகிற வரையில் யாரும் என்னைத் தொந்தரவு செய்யாமல் சற்று விலகி இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்‘ என்றவர். தீயணைப்புப் படையின் தலைவரையும், கமாண்டோ படைத் தலைவரையும் அழைத்து, எப்படிச் செயல்படலாம் என்று ஆலோசனைச் செய்தார்.
தீயணைப்புப் படையினர், ஆபத்துக் காலங்களில் உதவக்கூடிய மீட்புப் பணிக்கான கருவிகளுடன் ஆயத்தமாக, அலெக்சாண்டர் குகையினுள் நுழைய தன்னையும் தயார் படுத்திக் கொண்டார். தகவல் கூறிய காதன், லூயின் இருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு , இரண்டே இரண்டு பத்திரிக்கை நிருபர்களையும்,இரண்டு தொலக்காட்சிக் கேமராக்காரர்களையும் அழைத்துக் கொண்டு குகையினுள் நுழைத்தார்.
தீயணைப்புப் படைவீர்ர்கள் மிகவும் சக்தி வாய்ந்த மின்சார விளக்குகளை இயக்கி ,குகையின் இருட்டைத் துரத்த அனைவரும் முன்னேறினார்கள்.
ஏற்கெனவே காதனும், லூயினும் அடையாள அம்புக் குறிகளை வைத்திருந்த்தால் ,தடங்கலின்றி யாவரும் கார் நிறுத்தப்பட்ட இடம் வரையில் குகைக்குள் முன்னேறினார்கள். காரின் அருகில் வந்த உடன் , அலெக்சாண்டர் காரின் கதவைத் திறந்து பார்த்தார்.காரின் சாவி காரிலே இருக்க, ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தார். கார் எஞ்சின் இயங்கவில்லை. எந்த விதமான சத்தமும் வரவில்லை.
‘சார்! பெட்ரோல் தீர்ந்து போய் இருக்கலாம். எஞ்சின் இயங்காமல் இருப்பாதால் பேட்டரியும், சார்ஜ் இறங்கி, டெட் ஆகி இருக்கலாம்‘ என்றார் தீயணைப்புப் படைத் தலைவர்.
காரின் உள்ளே ஒரு காலி விஸ்கிப் பாட்டில் கிடந்தது.
‘நீங்க சொல்றது கூட சரியாக இருக்கலாம்‘ என்ற அலெக்சாண்டர் , தன் உதவியாளரை அழைத்து , இந்தக் காருக்குச் சொந்தக்காரர் யார் என்று விசாரிக்கச் சொல்லி விட்டு, தீயணைப்புத் தலைவரைப் பார்த்து,
‘சார்! எல்லா திசைகளிலும் தேடச் சொல்லுங்கள். யாராவது உயிருடனோ , அல்லது இறந்தோ இருக்கிறார்களா என்று பார்க்கச் சொல்லுங்கள்‘ என்றார்.
தீயணைப்புப் படை வீர்ர்களும், கமாண்டோ படைவீரர்களும் குகையினுள் எல்லாத் திசைகளிலும் வெளிச்சத்தைச் செலுத்தித் தேடிச் சென்றார்கள்.
‘சார்! இது ஏதாவது திட்டமிட்ட கொலைக் கேஸாக இருக்குமோ?’ என்று உடன் வந்த பத்திரிக்கை நிருபர் வினா எழுப்ப, சற்று எரிச்சலுற்ற அலெக்சாண்டர்
‘எந்த ஒரு லீடும் இன்னும் கிடைக்கவில்லையே.. அதற்குள் கேள்வி கேட்டா எப்படி?’ என்றார்.
‘ஆமாம் மிஸ்டர் காதன் ! நீங்க எதுக்காக இந்தக் குகையினுள் வந்தீங்க?’ என்று முதன்முதலாக காதனிடம் கேட்டார் அலெக்சாண்டர்.
‘சார்! இன்றைக்கு ஆசிரியர்கள் போராட்டம் .கல்லூரிகளுக்கும் விடுமுறை. அதான் இந்தக் குகையினைப் பற்றி ஏதாவது புதிதாகத் தெரிந்து கொள்ள முடியுமான்னு பார்ப்பதற்காக எனது நண்பர்களுடன் இங்கே வந்தோம் சார்!’ என்றான்.
‘அப்படியா?’ என்றவரை
‘சார்!’ என்று அழைத்துக் கொண்டு அருகில் வந்தார் உதவியாளர்.
என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்.
‘சார்! இந்தக் காரும், காருக்குச் சொந்தக்காரரும் காணாமல் போனதாக ஒருமாதத்திற்கு முன்பே ஒரு எப்.ஐ.ஆர் பதிவாகி இருக்குதாம் சார். அதனைத் தந்தவர் காணமல் போனவருடைய மனைவி சார்‘ என்றார்.
‘உடனே அந்த அம்மாவை அழைத்து ,அன்றையத் தினம் என்ன நடந்தது , அவரோட கணவர் எப்படிக் காணாமல் போனார் என்று விசாரித்துத் தகவல் கூறச் சொல்‘ என்றார்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது. தேடிச் சென்ற குழுக்கள் எதுவும் இதுவரைத் திரும்பி வரவில்லை.தீயணைப்புத் தலைவரை நோக்கித் திரும்பியவர்
‘சார்! எவ்வளவு தூரம் ஒவ்வொரு குழுவும் சென்றிருக்கிறார்கள் என்று வயர்லெஸ்ஸில் கேட்கச் சொல்லுங்க?’ என்றார்.
‘ஒ கே சார்!’ என்றவர் வயர்லெஸ் கருவியை இயக்கி ஒவ்வொரு குழுவாகத் தொடர்ப்பு கொண்டார். முதல் இரண்டு குழுக்களிடமிருந்து எந்த வொரு புதுத் தகவலும் இல்லை என்று பதில் வர ,மூன்றாவது குழுவிடமிருந்து ஒரு புதிய செய்தி வந்தது.
‘சார். நாங்கள் சேர்ந்திருக்கும் இடத்தில் ஒரு சிறிய அருவி விழுந்து கொண்டு இருக்கிறது.கொஞ்சம் கொடிகளும் இருக்கின்றன. குகை பல திசைகளிலும் பிரிந்து செல்கின்றது. ஒவ்வொன்றிலும் தேடிப் பார்க்கிறோம் சார்‘
‘ஏதாவது தகவல் இருந்தா கூப்பிடுங்கள்்’
‘ஓ கே ! சார் ’
அதற்குள் அலெக்சாண்டரின் உதவியாளர் , அருகில் வந்து
‘சார். காணாமல் போனவரின் மனைவியைக் கூப்பிட்டு விசாரணை நடத்திட்டாங்க..’
‘என்னவாம்…’
‘சார் ! காணாமல் போன அன்று..அவர் கணவர் மிகவும் மன உளைச்சலோடு இருந்தாராம்.மனைவிடமும் எரிந்து ,எரிந்து விழுந்தாராம். நிறைய குடித்து வேறு இருந்தாராம்.அப்புறம் திடீரென்று வீட்டில் இருந்து இரண்டு விஸ்கிப் பாட்டில்களை எடுத்துக் கொண்டு , காரில் கிளம்பிட்டாராம்.எங்கே போரேன்னு எதுவும் வீட்டில் சொல்லலையாம்‘
‘அப்படின்னா இது ஒரு கிரிமினல் கேஸாக இருக்கமுடியாது. அமைதி தேடி அலைந்தவர்,இந்தக் குகையினுள் நுழைந்திருக்க வேண்டும். அதிகமாகத் தண்ணி அடித்துவிட்டு காரிலிருந்து இறங்கியவர் வழி தெரியாமல் ,எந்தப் பக்கமாவது சென்றிருக்க வேண்டும்.அவர் வந்து ஒரு மாத்த்திற்கு மேல் ஆகிவிட்டது.இவ்வளவு நாள் ஒரு மனிதன் சாப்பாடு ,தண்ணீர் இல்லாமல் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்நேரம் நிச்சியமா அவர் இறந்துதான் போய் இருக்கணும். என்ன சொல்றீங்க சார்.’ என்று தீயணைப்பத் துறை தலைவரிடம் கேட்க,
‘நீங்க சொல்வது மாதிரி நடப்பதற்கு ,நிறைய வாய்ப்புகள் உள்ளன சார்.எப்படி ஆயினும் அவர் உடலாவது கிடைக்க வேண்டும் சார்‘ என்றார்.
‘கிடைக்கணும். ஆனா எவ்வளவு தூரம் இந்த ஆள் உள்ளே சென்றிருப்பாருன்னு தெரியலையே?. ‘ என்றவரின் குரலில் ஒரு அவநம்பிக்கை உணர்வு தெரிந்தது.
அப்போது தீயணைப்புத் துறைத் தலைவரின் கையில் இருந்த வயர்லெஸ் கருவி சிணுங்கியது.
‘எஸ்‘ என்றார்.
‘சார். மூன்றாவது குழு சார்.’
‘எஸ். சொல்லுங்க…’
‘இங்கே ஒருத்தரை மயக்கமான நிலையில் கண்டு பிடித்து இருக்கிறோம் சார்.’
‘உடனை அவரை வெளியே கொண்டு வாங்க…’
‘ஓ கே சார்’
‘சார். மூன்றாவது குழு மயக்கமான நிலையில் ஒருத்தரைக் கண்டு பிடித்து இருக்காங்களாம்.’
‘வெரி குட். நம்ப ஆபரேசனுக்கு வெற்றி கிடைத்திருக்கு. எல்லா குழுக்களையும் உடனை வெளியே வரச் சொல்லுங்க ’ என்றார் அலெக்சாண்டர்.
மூன்றாவது குழு மயங்கிக் கிடந்தவரைத் தூக்கிக் கொண்டு வந்தது.
‘வெளியே கொண்டு போங்க. உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லணும். எப்படியாவது இவரைக் காப்பாற்ற முயற்ச்சி பண்ணலாம்‘ என்றார் அலெக்சாண்டர்.
எல்லோரும் குகையின் முகப்பிற்கு வந்தவுடன், கேமிராக்கள் சூழ்ந்து கொண்டன.
‘தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முதலில் இவரைக் காப்பாற்றி ஆகணும்‘ என்று அலெக்சாண்டர் கேட்டுக்கொள்ள அனைவரும் ஒதுங்கி வழி விட்டார்கள். மயங்கிக் கிடந்தவரை ஒரு காவல் துறை வண்டியில் படுக்க வைக்க, அந்த வண்டி கிளம்பிச் சென்றது.
ஏற்கெனவே தகவல் சொல்லப்பட்டு இருந்ததால், மருத்துவமனையில் ,டாக்டர்கள் தயாராக இருந்தார்கள். உடனடியாக வேண்டிய முதலுதவிகள் செய்து மயங்கிக் கிடந்தவரை பேச வைத்தார்கள்.
‘மிஸ்டர் மைக் ! எப்படி இருங்கீங்க… பேச முடியமா? ’ என்றார் அலெக்சாண்டர்.
‘முடியும் சார்‘ என்றவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
‘நீங்க உயிரோடு திரும்பி வந்துட்டீங்க மிஸ்டர் மைக். எப்படி அந்தக் குகைக்குள் சென்று மாட்டிக்கிட்டீங்கன்னு சொல்ல முடியுமா? எப்படி இத்தனை நாள் உயிரோடு உங்களால் இருக்க முடிஞ்சுது மிஸ்டர்..’
தன்னைத் தயார் படுத்திக் கொண்ட மைக் ,மெதுவாக பேசத் தொடங்கினார்.
‘சார். அன்றைக்கு நான் ரொம்ப மன உளைச்சலோடு இருந்தேன்.நிறைய குடித்தும் மனசுக்கு அமைதி கிடைக்கவில்லை.அமைதி தேடி அந்த குகைக்குக் காரை எடுத்துக் கொண்டு சென்றேன். காரை நேரே குகையின் உள்ளே கொண்டு சென்றேன். கையோடு கொண்டு வந்திருந்த விஸ்கியை திரும்பவும் குடித்தேன். என்னை மறந்தேன். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தேன் என்று தெரியவில்லை. மயக்கம் சற்று தெளிந்ததும் , காரை ஸ்டார்ட் செய்து ,கொஞ்சத் தூரம் ஓட்டினேன். திடீரென்று கார் நின்று விட்டது.. அப்போதுதான் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரிந்தது. பெட்ரோல் அளவை பார்க்காமல் வந்தது தப்பு என்பது அப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது. ஆனால் அப்போது இருந்த போதையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. காரை விட்டு மீதம் இருந்த விஸ்கிப் பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு இறங்கினேன். ஒரே இருட்டாக இருந்ததால், எந்த வழியாக உள்ளே வந்தேன் என்பது தெரியவில்லை. வழி தெரியாமல் நடந்தேன். இடை இடையே கையில் இருந்த விஸ்கியைக் குடித்துக் குடித்துக் காலி பண்ணினேன். பின்பு போதையிலே மயங்கி விழுந்து விட்டேன். அப்படி மயக்கத்தில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று தெரியவில்லை. திரும்பவும் கண் விழித்த போது, சற்று தொலைவில் நீர் விழும் சத்தம் கேட்டது.இருட்டினுள் சத்தம் வந்த திசையினை நோக்கி நடந்தேன். எங்கும் இருட்டு. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயம் மனதைக் கவ்விக் கொண்டது. பசித்த போது கொடிகளின் வேரினை பறித்துத் தின்றேன். இலைகளையும் தின்று தண்ணீர் குடித்துக் கொள்வேன். இரவா பகலா எனபது தெரியமல் தவித்தேன். எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் தெரியவில்லை. வர வர நடப்பதற்கும் தெம்பில்லை.மயக்கத்தில் கீழே விழுந்து விட்டேன். எத்தனை நாளா மயங்கிக் கிடந்தேன் என்றே தெரியவில்லை.நல்ல வேளையாக நீங்க வந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்.’ என்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
‘ஐயா! நீங்கள் குகைக்குள் புகுந்து இன்றோடு 35 நாடகள் ஆகிவிட்டன.இத்தனை நாட்கள் நீங்க உயிரோடு இருந்தது தான் ஆச்சரியம். எல்லாம் தெய்வச்செயல் என்றுதான் சொல்லவேண்டும். உங்களைக் கண்டு பிடிப்பதற்கு உதவிய காதனுக்கும், அவனது நண்பர்களுக்கும் தான் நீங்க உண்மையிலே நன்றி சொல்ல வேண்டும்.’ என்றார் அலெக்சாண்டர்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த காதனின் இரண்டு கைகளையும் எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டவர்,
‘தம்பி ! ரொம்ப நன்றி . நமக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் ,ஒதுக்கி வைத்து விட்டுப் போகாமல், உரியவங்களுக்குத் தகவல் தந்து என்னைக் காப்பாற்றிய உங்க உதவிக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை தம்பி. உயிர் உள்ளவரைக்கும் உங்களை நான் மறக்க மாட்டேன் தம்பி.’ என்றவரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
மறுநாள் எல்லாச் செய்தி இதழ்களிலும், ஊடகங்களிலும் , காதன் அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து, ஓரு உயிரைக் காப்பாற்றிய செய்தி தலைப்புச் செய்தியாக , போட்டோகளோடு வெளிவந்தன.
*********************************
பொதிகை மு.செல்வராசன்