உனதன்பும் நானும்

புதை மணலிடை
பொதிந்தொளியும்
மரணமென

என் காதலிடை
கரந்துறையிது
காமம்

அந்த
நச்சரவத் தீண்டலில்
வெந்து சரியுமென்
மனிதத்தை

மீளக் கட்டமைக்கும்
ஒரு தேவ சிற்பிஎன
உன் புன்னகை

இருந்தும்
அமிழ்தம் அருந்தியபின்னும்
அரக்கமாகும்
என் மனத்தை

ஒரு மழலையென
உன் மார்பிடைப் போர்த்தி
ஸ்பரிசப் பாலுட்டி
உறங்கச் செய்கிறாய்

ஒரு
பெரு நதி வெள்ளமென
வழிந்தோடும்
உன் அன்பிடை
பிரபஞ்சவெளிச் சிறகென
மிதந்து ஓய்கிறேன்
நானும் என் ஜீவனும் .

எழுதியவர் : (8-Dec-15, 1:13 pm)
பார்வை : 125

மேலே