கவிதை - கதை - கட்டுரை

கவிதை என்பது
அறிவுச்சுடர் சமைக்கும்
அறுசுவை விருந்து;

கதை என்பது
நேற்றின் நிழல்,
அனுபவ பகிர்வு,
சம்பவத்தின் வாக்குமூலம்.

கட்டுரை என்பது
அறிவுக்களஞ்சியம்,
தகவல் பரிவர்த்தனை,
கருத்துக்குவியல்...

கவிதையில் காணக்கிடைப்பது:

அழகை இயம்பும் வருணனை,
ஆசையினை கொட்டும் வார்த்தை ஜாலம்,
இளமையை ஊக்குவிக்கும் தீண்டல்,
ஈரத்தை வெளிப்படுத்த ஒரு சீண்டல்,
உணமையை உரச போடப்படும் புடம்,
ஊக்கத்தை விதைக்கும் அனுபவ வேதம்..

காதலின் ஊற்று, மன அஞ்சல், மயக்க முனகல்...
காதலுக்குரிய ஊடல், உள கூடல், தெறிக்கும் எச்சில்...
காதல் கசப்பில் வெளிப்படும் சோகம், துக்கம், வேதனை...

கவிதை காதலுக்கு மட்டும்
முதலில் கோடைக்காலமாய்,
சிலருக்கு வாடைக்காலமாய்,
இன்னும் பிறருக்கு வசந்தகாலமாய்
முடிவில் முட்புதராய் முல்லைக்காடாய் இட்டு செல்கிறது,

காதலைப் பொறுத்தமட்டில்
கவிதை ஒரு SMS
கதை ஒரு டைரி,
கட்டுரை ஒரு கெய்டு.

கதை வாழ்க்கையைப்பற்றி
பதிவிடுகிறது; கஷ்டங்களை நஷ்டங்களை
கண் முன் படம் பிடித்து நெஞ்சில் ஈரத்தை தடவி விட்டு
விழியை ஆழம் பார்க்கிறது அல்லது அகல விடுகிறது,
சில நேரம் ஆனந்த ஊஞ்சலில் அமர வைத்து விடுகிறது.

கட்டுரை இழுத்து செல்கிறது, நம் கவனத்தை;
ஒவ்வொரு விஷயத்தின் ஆதி அந்தத்தை
உள்ளும் புறமும் புரட்டிப்போட்டு புலனாய்வு செய்கிறது.
கட்டுரை தகவல்களை நம்முன் பரிணமிக்கிறது,
அரிய விஷயங்களை பரிசளிக்கிறது,
அறிவை ஒரு ஆறாக்கி நம்முன் ஓட விடுகிறது.

மொத்தத்தில்,

கவிதை உயிரோட்டம் என்றால்
கதை உணர்வோட்டம்;

படிக்கும் இன்பம் தர
கதை பழையன என்றால்
கட்டுரை புதியன.

கவிதை சுருங்க சொல்லும்
கட்டுரை விருந்து படைக்கும்..

உங்களுக்கு எது வேண்டும்,
உடனே சொல்லுங்கள்.!

கதை? கவிதை? கட்டுரை?...

அன்புடன்,
ஆடிட்டர் செல்வமணி.

எழுதியவர் : செல்வமணி (8-Dec-15, 11:14 pm)
பார்வை : 204

மேலே