வெள்ளத்து உழலுது சென்னை

ஆனந்தக் களிப்பு
"நந்தவ னத்திலோர் ஆண்டி" என்ற வண்ணமெட்டு....


வெள்ளத் துழலுது சென்னை - இந்த
---வேதனை கண்டும் இரங்காயோ ! அன்னை !
உள்ளத்தில் கோபமும் உண்டோ - என்ன
---உள்ளதென் றாலும் இயம்பிடு தேவி !

தூசுக்கு நிலந்தன்னை ஆக்கி - நல்ல
---தூய்மைதனை இந்த மண்விட்டுப் போக்கி
மாசுக்கு பூமியை விற்று - என்றும்
---மாண்டிட லாக துன்பங்கள் பெற்றுக்
காசுக்கு அலைவதைக் கண்டு - நீயும்
----காய்ந்து சினங்கொண்டு விட்டாயோ தேவி !
பேசிடு பேசிடு தேவி - இந்தப்
---பேதைகள் உன்மடிப் பிள்ளைகள் அன்றோ ? (வெள்ளத்... )

உள்ளத்தி லேயொன்றை வைத்து - இங்கு
---ஊருக்கு வேறொன்று பொய்யாய் மொழிந்து
கள்ளத்த னம்மிகச் செய்து - வாழும்
---கயவர்கள் பூமியில் உள்ளனர் என்று
வெள்ளத்தை இங்கே அனுப்பி - கெட்ட
---வேடங்கள் சாயங்கள் யாவையும் மாய
கள்ளொத்த புன்னைகை யாளே - செய்த
---காரிய மோயிது கூறிடு தாயே ! (வெள்ளத்...)

சின்னஞ் சிறியவர் வந்து - உன்றன்
---சீரிய மென்மலர்ப் பாதங்கள் பற்றிக்
கன்னல் மொழியித ழாலே - பள்ளிக்
---கஷ்டங்கள் கூறவே வெள்ளமும் தந்து
அன்னவர் மகிழ்துமி ருக்க - அன்னை
---அன்புப் பரிசெனக் கொடுத்துவிட் டாயோ
சென்னையைக் நீ!கொஞ்சும் நோக்கு - மக்கள்
---செத்து மடிந்திடும் இன்னல்கள் போக்கு ! (வெள்ளத்...)

அம்மையே கோபம் விடுத்து - இந்த
---அவல நிலையிது மாய்ந்திடச் செய்து
வெம்மை கொடுத்திடும் வெள்ளம் - விட்டு
---வேகமாய்ச் சென்றிட அருளது தாராய் !
கம்ம லழகுடை யோளே - இங்கு
---காரிய மாற்றிடும் இளைஞரின் கைகள்
செம்மை புரிந்திட நீயும் - நின்று
---துணையெனச் சேருவை சேருவை தேவி ! (வெள்ளத்..,)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (9-Dec-15, 5:55 pm)
பார்வை : 77

மேலே