சிங்கார சென்னை

ஓயாத மழை, கரைபுரண்டோடிய வெள்ளம்,
தலை நகரத்தை புரட்டி போட்ட பேரிடர்,
போராட்டத்தில் எனதருமை மக்கள்!
இயற்கை சீற்றம் என்றார்கள்,
மனித தவறு என்றார்கள்
செயல்படா அரசென முழங்கினார்கள்
பார்க்க ஒருவரும் வரவில்லை என்றார்கள்
குமுறல்கள், அழுகை குரல்கள்,
ஊடகங்கள் பதித்த ஒலி, ஒளிகாட்சிகள்
வேதனை தீயை மனதில் மூட்ட
கடல் தாண்டி வந்த நாங்கள் ஆதரவு நல்கிடவே
கடிதாக பறந்துவர இறகுகளைத் தேடினோம்.
கண்ணீருடன் கண்மூடாமலிருந்தோம்.
இயலாமையை எண்ணியே!
அமைதி இழந்த நெஞ்சுக்கு அருமருந்தாக
கருணைக்கொண்ட கரங்கள் இணைய
காத்திருந்த மக்களை, வீரர்களும்,
படகுகளும், பாங்குடனே மீட்கவே,
ஈரம் கொண்ட நெஞ்சுடன் உணவும் நீரும்
கொடுத்திட்ட அருமையான மாந்தரும்
காணக் காண உவகையும், பெருமிதமும் தந்ததே!
அடடா ! என்ன இது? எங்கிருந்து வந்தது?
எல்லையில்லா அன்பும், தன்னலமற்ற சேவையும்?
பிறர் நலம் பேணல் நம்மண்ணின் சுவாசம்!
தாய் பாலுடன் நம்முள் புகுந்த நேசம்!
சென்னையே துயரம் விடு, எழுந்து நில்
தோள்கொடுக்க தோழர் பலர் யாமிருக்கோம்
துவண்டிடாமல் ஒன்றிணைந்து மீண்டும் நமது
சிங்கார பட்டிணத்தை சிறப்புறவே செய்திடுவோம்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (10-Dec-15, 1:06 am)
பார்வை : 215

மேலே