காட்சிப் பிழைகள்

ஒரு குவளையில்
நீ குடித்து விட்டு போன
மிச்ச தண்ணீர் இருக்கிறது
நான் எடுத்து குடித்து விடுவேனோ என
அவ்வளவு கவலை
அந்த குவளைக்கு...

உனது மௌனம் என்னை
முழுமையாக மூழ்கடித்து விட்டது
அதில் நான்
தத்தளிக்கிறேனா நீந்துகிறேனா என்பது
நீ சொல்லும் பதிலில்தான் இருக்கிறது...

நான் உட்கார்ந்து கொண்டிருந்தாலும்
ஓடிக் கொண்டேதான் இருக்கிறது
உன் நினைவுகள் எனக்குள்...

உனக்காக சிந்தும் கண்ணீர் துளிகளில்
ஒருபோதும் உப்பு இருப்பதே இல்லை...

உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஒரே ஒரு கேள்விதான் எழுகிறது
நீ பிறந்தது எனக்கு
வரமா சாபமா?...

நான் ரத்தத்தால்
உன் பெயரை எழுதுகிறேன்
நீ சிவப்பு ரோஜாவை சூடி கொள்கிறாய்
அப்போது கூட இரண்டும் ஒரே நிறமில்லை...

நீ கடலாக இருக்கிறாய்
நான் அலைகளுக்கு பயந்து
ஆற்றில் குதிக்கிறேன்
அதிலும்
சேருமிடம் நீயென தெரியாத அப்பாவியாக...

நான் அந்த பக்கம்
நீ இந்த பக்கம்
தண்டவாளமாக இருக்கிறோம் நாம்
நம்மை மிதித்துக் கொண்டே
ரயிலில் வருகிறது காதல்...

ஒவ்வொரு பரிசு பொருளிலும்
நீ நிராகரித்த நிமிடங்கள்
நிம்மதியாக தூங்குகிறது நீக்கப்படாமல்...

நீ போகும்போது
பூ பூத்ததாக சொல்லப் படும் பாலைவனத்திலும்
நான் போகும்போது மணலாகத்தான் இருக்கிறது...

உனது கன்னக்குழியில்
எனக்கான ஆறடி அப்படியே தெரிகிறது..

நீ நிலவாக இருக்கிறாய்
நான் நீராக இருக்கிறேன்
எனக்குள்
தவழ்கிறாய் நீ
தவிக்கிறேன் நான்...

இப்போது அடிக்கடி
பச்சை மரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீ தந்த வலிகளை மறக்க...

நீ மிதித்து விட்டுப் போனாலும்
உன் பாதச் சுவடு பத்திரமாய் இருக்கிறது
என் மனதுக்குள்...

ஒரு குளம் முழுக்க
கண்ணீர் தேங்கி இருந்தாலும்
அதில் விழும் உன் பிம்பம்
சிரித்த முகத்தோடுதான் இருக்கிறது...

நீ காற்றாக இருக்கிறாய்
நான் சுவாசித்து
உன்னை உள்ளே இழுக்கும்போது
என் உயிர் வெளியே போகிறது...

உன்னிடம் தோற்றுப்போக
நான் ஒன்றும் போருக்காக வரவில்லை
காதலுக்காக வந்திருக்கிறேன்...

எந்த பிழையும் இல்லாமல்
என்னிடம் எழுதிக் காட்டினாய்
என்னை முதன் முதலில் பார்த்தது
காட்சிப் பிழை என்று...

============= ஜின்னா ================
பின் குறிப்பு:

இந்த தொடரில் வரும் எந்த படைப்பும்
படைப்பாளர்களின் அனுமதியின்றி
பிரசுரிக்கவோ அல்லது திருடி பதிக்கவோ
செய்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவார்கள்...

எழுதியவர் : ஜின்னா (12-Dec-15, 12:11 am)
Tanglish : kkatchip pilaikal
பார்வை : 1235

மேலே