காட்சி ப்பிழைகள் 4

என் நீண்ட இரவுக்கு
வழித்துணையாய் வா
நடு வானில் இருக்கிறது நிலா.
நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.
உன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது
என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.
உன்னை மீண்டும் மீண்டும் நெய்து
நான் கிழிந்துபோகிறேன்.
என் கண்ணீர் பருகி வளரும்
பூச்செடி நீ.
உன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்
என் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.
உன் விழிமெழுகில் விழத்துடிக்கும்
விட்டில் நான்.
எச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்து விபத்தானவன் நான்.
உன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா
பொன்வானில் நிலா ஒளிரப்போகிறது.
ஆடையை அட்டையாக்கிக்கொண்ட
கவிதைப்புத்தகம் நீ.
பூதங்கள் மட்டுமே
புதையலுக்கு
காவலிருக்க வேண்டும் என்பதில்லை.
சில நேரங்களில்
பூப்போட்ட தாவணியும் காவலிருந்துவிடுகிறதுதானே.!
இருட்டும் முன் கூடடையும் பறவையென
நித்திரைக்கு முன் உன் நினைவை அடைகின்றேன்.
இந்தப்பிரபஞ்சம் உன்னை பாட நினைக்கும் போதெல்லாம்
என்னை புல்லாங்குழல் ஆக்கிவிடுகிறது.
பூவைவிட பூப்பின் இரகசியமே வண்டை வரவழைக்கிறது.
இரசிக்கமுடியா புத்தகத்தின் உள்
இரகசிய மயிலிறகாய் நீயிருக்கிறாய்.
விற்கப்படாத ஓவியம் தெருவில் இருக்கையில்
ஏனோ உன் ஞாபகம் வந்துவிடுகிறது
இப்படி எத்தனை தெருக்களில் என் ஞாபகம் வந்ததோ உனக்கு.
பிரியக்கூடாதென சொல்லிவிட்டு
நீ பிரிந்துபோன இரயிலில் இணைந்தே இருந்தது பெட்டிகள்.
உன் காலுக்கு கொலுசு வாங்கி வைத்திருக்கிறேன்
என்றேனும் ஓசையில்லாமல்
நீ வருவாயென
இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணீர் சிற்பம்
நானாகத்தான் இருப்பேன்
எனை செதுக்கிய சிற்பியோ நீயாகத்தான் இருப்பாய்.
நிலாகண்ணன்