கொஞ்சலின் தூக்கல்

நீ பொலிவியாகவும்
உங்கப்பன் அமெரிக்காகவும்
தினமும் கனவு வருகிறது
'சே' எனும் பெயர் வைத்த குற்றத்திற்கு.

*

அற்புதங்களை
அவ்வளவாக பார்த்ததில்லை
உன்னை கண்டேன்
முடிவை மாற்றிக்கொண்டேன்.

*

வானவில்லிற்கு ஏழு வண்ணமாம்
உன் மார்மீது கிடக்கும்
அந்த துப்பட்டாவிற்கு
எத்தனை வண்ணமோ.

*

'அம்மா வந்துடாங்க,
வைக்கிறேன்' என்று
நீ சொல்லும் ஒற்றை நொடி
கவிதைக்கு நிகர்.

*

அடித்து எழுதிய கவிதைகளாய்
ஈரம் சொட்ட சொட்ட
நீ வரும் செவ்வாய், வெள்ளி
கோவில் அத்தனை அழகு.

*

நீ செய்யும்
சுவையில்லாத தேநீரும்
உப்பில்லாத சாம்பாரும்
சமையலறை கவிதைகளாய்
தொகுத்தால் என்ன.

*

கொடியில் காயும்
நமது ஆடைகள்
பேசிக்கொண்டன
'மீண்டும் எப்போது நம்மை
ஒரே பக்கெட்டில் ஊர வைப்பார்கள்' என்று.

*

முத்தம் வேண்டுமென
நீ செய்யும் கெஞ்சல்
கொஞ்சலின் தூக்கல்.

*

எழுதியவர் : கோபி சேகுவேரா (16-Dec-15, 7:15 pm)
பார்வை : 113

மேலே