ஒற்றை கால் காகம்

அதோ ஒற்றை கால் காகம்...
சிறகடித்து வந்து
சந்தோஷமாய் ...
தண்ணீர் குடிக்கும்
ஒற்றை கால் காகம்...!

தான் கருப்பா சிவப்பா
பாவம் அதற்கு தெரியாது...
தாழ்வு மனப்பான்மை
இன்னதென்று ..
இதற்கு எப்போதும் தெரியாது...!

ஒற்றை கால் கொண்டு
உல்லாசமாய் சுற்றி திரியும்
இந்த ஜீவனின் அறிவிடம்,
மனித அறிவு மண்டியிடவே வேண்டும்...!

தாகம் என
என் வீடு கூரையில்
தஞ்சம் அடைந்தது
அந்த பறவை..!

அமாவாசை அன்று மட்டுமே நமக்கு
அவற்றின் நினைவு வரும்...
அன்று மட்டும் தான்
நம் முன்னோர்கள்
காகம் வடிவம் எடுப்பார்களோ...?

அதையும் கூட
இந்த ஹை டெக் உலகம்
எத்தனை நாள் செய்யுமோ...?

கால சக்கரத்தில்
"அடி" பட்டு போன
நல்லோர்களின் நன்மொழிகளில்
இதுவும் ஒன்றே...!

எறும்புக்கு உணவிட
கோலம் போட்டாள்
நம் பாட்டி...!
ஆனால் நாம்...
அதை சாயங்களை கொண்டு
அழகாய் பதிய வைத்தோம்...
என்ன ஒரு முன்னேற்றம்
இந்த ஆறாம் அறிவில்...!


எண்ணங்கள் எங்கெங்கோ சென்று...
அந்த ஒற்றை கால் காகத்திடமே
மீண்டும் திரும்பியது...

ஓடிசென்று ஒரு கை உணவள்ளி
வீட்டு சுவற்றில் வைத்தேன் நான்...!

உணவில்லா நேரத்திலேயே...
உயிர்களின் குணம் புரியும்...

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்...
வாடிய காலங்கள் போனது...
கை குழந்தையின்
பசி ஆற்றும் பாலை
விலையேற்றி விற்கும்
விதியும் நேர்ந்தது...!

திடீரென
கா கா என கரைந்தது
அந்த ஒற்றை கால் காகம்...
தனக்கு வைத்த உணவென்று
தெரியாமல்..
தன் இனத்தாரையும் அழைத்து
பகிர்ந்து உண்டது
அந்த சிற்றறிவு ஜீவன்...!

அடுத்த நாள் செய்தி தாளை
அக்கறையோடு வாசித்தேன்...!


சென்னையில் குடிநீர்
மூன்று மடங்கு விலைக்கு
விற்கப்பட்டது...!


அந்த ஒற்றை கால் காகம்
என் எண்ண வானில் கம்பீரமாய் பறக்க...
எண்ணி பார்த்தேன்...

உணவை பகிர்ந்து உண்ண
நாம் என்ன காகங்களா ...
"கேவலம்" மனிதர்கள் ஆயிற்றே...!!!!


இவன்,
நிலவின் நண்பன்..!

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (17-Dec-15, 7:19 pm)
Tanglish : otrai kaal kagam
பார்வை : 98

மேலே