காட்சிப் பிழைகள் -9-சுஜய் ரகு

என்
குடையின் ஏக்கம்
நீ மழை பொழிவதில்
அல்ல
வெயில் சிந்தாதிருப்பதில்

உன்
அழகின் அழகினூடெ
சிறை வைக்கிறாய்
இனி
மெள்ளச் சாகும்
என் காதல்

நீ காதல்
தெருக்களில்
கனவுப் பூக்கள்
விற்பவள்

----------

உன்
ஆழ்துளைப் பார்வையில்
விழுந்து
மூர்ச்சையாகின்றன
பருவக் குழந்தைகள்

பூக்கள்
அழைக்காவிடினும்
வண்டுகள்
வழி பிறழ்வதில்லை

உன் தாவணி
உனக்கு சிறகு
எனக்கு சிறை

----------

விழுவதெல்லாம்
எரிந்துபோனால்
தீ
என்ன செய்யும்

மழையின் வழியில்
மிதந்து கெட்டால்
மழை
என்ன செய்யும் ?

உன் வழியில்
நான்
பூக்கள் ஏந்தி நிற்கவில்லை
முட்கள்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்

----------

கனவுகள்
வாழ்க்கையின் தேடல்
காதலின்
அபிமானம்

நான் சுவற்றில்
வேர்விட்ட நாகரிக விதை
என் பண்பாடு
உன் மண் மணத்தில்

சில கனவுகள்
ஒரு கல்லறை
உன்
பிரிவு தந்த பரிசு

----------


தேசத்தின் அழகு
அஹிம்சையில் இருக்கிறது
நீ
என் அஹிம்சை

வரலாறுகள்
கண்ணீர் சுமப்பதுபோல்
நான் உன்னை
சுமக்கிறேன்

என் காதல்
எனக்கும் கண்ணீராகிறது
உனக்கும் கண்ணீராகிறது

----------

நீ எய்திய
பருவத்தின் நோக்கம்
'கொள் 'வதா? 'கொல்'வதா?

தனித்த ஒரு மரத்திற்கு
நட்சத்திரங்களே
துணை
சூரியனற்ற பகல்
அதன் சாபம்

ஒரு கடிதம்
உனக்காக எழுதுகிறேன்
என் உயிர்தான்
தபால்காரன்

----------

காதல், சண்டை
சுகம், சுமை
கண்ணீர், புன்னகை
வா நாமொரு
கூட்டுக் குடும்பமாவோம்

மழைக்குப் பிடித்ததுபோல்
என்
ஒழுகும் குடிசை
உனக்கும் பிடிக்கும்

ஆம்
நீ வேறு நான் வேறு தான்
பாலினத்தில்

----------

உன் மௌனம்
என் விலங்கு
அது உடையவேண்டும்
என்பது
காதலின் தவம்

வலி பேசாத
கவிதை
கவிதையாவதில்லை
வலி தராத
காதலும்
காதலாவதில்லை

நீ என்னில்
பெருகும் கண்ணீர்
தொலைந்த புன்னகை

----------

வன்முறை
பலிகொள்ளும் அப்பாவி
உயிர்களாய்
செத்து விழுகிறது
நீ இல்லாத நாள்கள்

எமன்
வாழ்க்கைக்கு
வலை விரிக்கவில்லை
மரணத்திற்கு
சவப்பெட்டி செய்கிறான்

வானம் இருக்கிறது
சிறகும் இருக்கிறது
வாழக் கூடொன்று அவசியம்
நீ என் கூடு ..!

-சுஜய் ரகு-

எழுதியவர் : சுஜய் ரகு (20-Dec-15, 2:23 am)
பார்வை : 504

மேலே