கரை காணா வேட்டிகள்

இன்றுவரை யாரும்
உரைக்கவில்லை...!
நூல் பிரியும்
தருவாயிலும்
கரை(கறை) காணா
வேட்டிகளின்
களங்கமதை...!
பத்துடன் பதினொன்றாக
பல
பனியன்,கால்சட்டை,தாவ­­
ணி சகிதம்
வீசப்பட்டாலும்...
முதலில் வந்த
வேட்டிக்கு
சலவையென்னவோ
இதர உருப்படிகளை
துவைத்த பின்புதான்!...
அதற்குள்
அதன் நூல்
பிரியவும்கூடும்...!
கறைப்பட்டு கந்தலான
இதர வேட்டிகளைக்
கண்டும்... கறைக் காணா
வேட்டி தவிப்பது
சமூகத்தின்
ஏச்சுக்காகவோ... அறியா
இச்சைக்காகவோ...
அல்லது
இளைப்பார ஒரு
கொடிக்காகவோ... அதை
யாரறிவார்?!..
சாயம் போகாமல்
நூல் திரிந்த
சேலைகள்
கவனிக்கப்பட்ட அளவில்
கரை(கறை) காணா
வேட்டிகள்
கவனிக்கப்படாததும்
இங்கு சமூக நட்டமே...!
உள்ளுக்குள் நாளும்
மாய்ந்து உடன் வந்த
உருப்படிகளின் நன்முறை
சலவைக்காய்
காத்துக்கிடந்து... சக
வேட்டிகளின்
நகைப்புக்கு
ஆளாகி...
கந்தலாகும்முன்
கறைபட தவிக்கும்
வேட்டியதன்
மனக்கதறல்
இங்கு யாரறிவார்?!
நார்காணா பூவுக்கும்...
கூந்தல்காணா
மலருக்கும்... சாயம்
போகா
நாள்பட்ட
சேலைக்கும்...
கவிபுனைந்தரற்றிய
கவிஞர்களே...!
இதோ...
காலம் கடந்தும்
புதுப்பொலிவு
குறையாமலே
நூல்பிரிய
துவங்கியிருக்கும்...
உபயோகப்படுத்தாத...
கரை(கறை) காணா
வேட்டிகளின் நிமித்தம்...
அவற்றின்
வெளியதிரா
மனவுளைச்சலுக்காக
ஏது செய்யப் போகிறீர்?!...
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

எழுதியவர் : Daniel Naveenraj (22-Dec-15, 8:11 am)
பார்வை : 91

மேலே