எனக்கென்று…

எனக்கென்று…!!

சூதுவாது ஏதுமில்லா
உலகம் போகிறேன்
சூழ்ந்த துன்பம் விட்டு விலகி
தொலை தூரம் போகிறேன்..!!

மானுடத்தின் வாசமில்லா
வனமும் போகிறேன்
மாக்களோடும் மரங்களோடும்
பேசப் போகிறேன்...!!

சந்தனக் கிளை யொடித்து
குடில் அமைக்கப் போகிறேன்
வெட்டி வேரை கற்றையாக்கி
கூரை வேயப் போகிறேன்..!!

வெளிச்சதிற்கு மின்மினியால்
விளக்கு செய்யப் போகிறேன்
மரமல்லி மஞ்சமமைத்து
உறங்கப் போகிறேன்..!!

சிக்கிமுக்கி தீயில் வாட்டி
கிழங்கு தின்னப் போகிறேன்
தேனடையில் தேனெடுத்து
திகட்டப் பருகப் போகிறேன்...!!

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
கற்கப் போகிறேன் - மாண்ட
கோலமயில் உடல் புகுந்து
நடம் புரியப் போகிறேன்..!!

கொஞ்சுமந்த கிளிகளோடு
பேசப் போகிறேன்
கூவித் திரியும் குயில்களோடு
பாடப் போகிறேன்...!!

கிளி குயிலின் பேச்சு மொழி
பெயர்க்கப் போகிறேன்
செந்தமிழை அவற்றுக்கெல்லாம்
சொல்லித்தரப் போகிறேன்..!!

நத்தை நாரை நானும் கண்டு
நட்பு கொள்ளப் போகிறேன்
மான்களோடு மான்களாகித்
துள்ளித் திரியப் போகிறேன்..!!

இறைவன் கற்பனையில்
அத்தனையும் ஆகட்டுமென்றான்
எனக்கென்று எதுவுமில்லை
போகட்டுமென்றேன்..!!

எழுதியவர் : சொ.சாந்தி (24-Dec-15, 11:49 pm)
பார்வை : 92

மேலே