சுமை

கூண்டுக் கிளியின்
கொவ்வைப்பழ அலகு
அந்த வீட்டின்
செல்ல
குட்டிப் பெண்ணை
கொச்சையாக
கூப்பிடுகிறது
கடலாகி நிற்கும்
அவள் கண்ணீரில்
அலை அலையாய்
கொந்தளிக்கும்
வேட்கைகளும்
விசும்பல்களும்
கேவல்களும்
புற வெளி உயிர்கள்
அறியாத புதிர்கள்.
பாறைகளை மோதி
சிதைவுண்டு போகும்
அந்த நோவுண்ட சின்ன மனசு
கரையேறத் துடிக்கும் அவளை
ஆசுவாசப்படுத்தாமல்
உயிரோட்டமான
பொக்கிஷங்களையும்
வண்ண எண்ணங்களையும்
தன்னிடமிருந்து புடுங்கி
கடலுக்குள்ளேயே
எறிந்து விடுகிறது. .
என்ன இருந்தாலும்
நிர்ப்பந்திக்க முடியாத
நிறை கலசம் அவள்
எப்போதும் வாசலில்
வரவேற்புக்காக
வாழையிலை மீது
குந்தி இருக்கிறாள். .....
வாழும் கவிதை
என்பதை விட்டு
வறுமைக் கோடிட்டு
என் இதயம்
மொழி பெயர்க்க முடியாமல் தவிக்கிறது. ....
- பிரியத்தமிழ் -