காட்சிப் பிழைகள் - 14
இதழ்விரித்த மென்மலரே உதிர்கையிலும் புன்னகைத்தாய் !
இமைமூட முடியாமல் கனவினிலும் ஏன்வதைத்தாய் ?
உன் மின்னல் பார்வை பண்ணிய மாயம்
என் நெஞ்சை வெட்டிச் செய்தது காயம் !
புரிதலில்லாப் பெண்மையிடம் அடகுவைத்தேன் நெஞ்சை
மீட்டெடுக்க முடியாமல் துணைக்கழைத்தேன் நஞ்சை !
என்னகத்தில் ஏற்றிவைத்தாய் காதலெனும் ஜோதி
நமைப் பிரிக்க கொலைவெறியாய் வந்ததிந்த ஜாதி !
நான்பாடும் பூபாளம் முகாரியாய் ஒலிக்குதே
என்காதல் தில்ருபா மீட்டுவாரின்றித் துடிக்குதே !
உன்பிள்ளைக்கு ஏன் என்பெயரை வைத்தாய்
பேர்சொல்லிக் கூப்பிட்டு என்மனதைத் தைத்தாய் ?
சிதையினிலே கிடக்கையிலே என்னிதயம் உனைத்தேடும்
வராவிட்டால் அமைதியாய் எரிந்துவிட விழிமூடும் !
எனக்குள்ளே நம்காதல் புதையுண்டுப் போகுமோ
நம்மையும் மீறியது புனர்ஜென்மம் எடுக்குமோ ?
புரியாது போனாலும் வைக்க மாட்டேன் முற்றுப்புள்ளி
பிரிந்தாலும் வைக்க மாட்டேன் காதலுக்குக் கொள்ளி !
கொழுந்துவிட்டு எரிந்ததே என்காதல் தீபம் !
காற்றுவந்து அணைத்ததே என்செய்தேன் பாபம் ?
மனவயலை உழுது விதைத்தேன் காதல்பயிர்
அறுவடை காணுமுன்னே வெள்ளத்தில் போனதுஉயிர் !
***************************************************************************************
படகோட்டி
***************
அலைகடலே வீடான கதையைநான் சொல்லவோ
வலைவீசி மீன்பிடிக்கும் பிழைப்பைநான் சொல்லவோ ?
கட்டிலில்லை மெத்தையில்லை முப்பொழுதும் படகிலே
உப்புக்காற்றில் உறவாடும் வாழ்வைநான் சொல்லவோ ?
கடலம்மா மடிதனிலே தவழ்ந்தாடும் பிள்ளைகளின்
உடலுக்கு வண்ணமில்லை உண்மைநான் சொல்லவோ ?
சாண்வயிறு வளர்ப்பதற்குச் சாமத்திலே கடலிறங்கி
ஊண்உறக்கம் தொலைத்துவிட்ட நிலையைநான் சொல்லவோ ?
தண்ணீரில் சென்றகணவன் வரும்வரையில் அமைதியின்றி
கண்ணீரில் காத்திருக்கும் தவிப்பைநான் சொல்லவோ ?
மீன்பிடிக்கப் போனவர்கள் மீண்டுவர முடியாமல்
சிறைபிடித்த சோகத்தின் சுவடைநான் சொல்லவோ ?
எல்லைகளைத் தாண்டியதாய் பொய்க்குற்றம் சுமத்திவிட்டு
துப்பாக்கி யால்சுட்ட அவலம்நான் சொல்லவோ ?
பிரச்சனைகள் புரிந்திருந்தும் தீர்வுகாண முடியாமல்
திண்டாடித் திசைதிருப்பும் அரசைநான் சொல்லவோ ?
தத்தளிக்கும் வாழ்க்கையிலே இயற்கையுமே இம்சித்தால்
செத்துவிடத் தோன்றிடுமெம் விதியைநான் சொல்லவோ ???
***************************************************************************************
துளித் துளியாய் ....!!!
````````````````````````````````
மிச்சம் ஏதும் வைக்காமல்
சுருட்டிச் சென்றது வெள்ளம் .
ஆனாலும் மிதக்கிறேன் ...
பத்திரமாய்
இதயத்தில் நீ !
உன் செம்மர இதயத்தைக்
களவாண்டதால்
கட்டையாகிப் போனேன் !
புத்தாண்டு சிறப்புத்
தள்ளுபடியில்
கழிந்து விட்டது
என் காதலும் !
உன் காதல் சின்னத்தில்
வாக்களித்துவிட்டேன்
நீ தந்தது தேர்தல் கால
வாக்குறுதி
என்பதை அறியாமல் ....!
மௌனம் காத்திடு
புதைந்தபின்
நம் ஆன்மாக்கள்
பேசிக்கொள்ளட்டும் ...!
என் கல்லறையில்
சன்னல் வையுங்கள்
கஸல் கேட்டு
கால் கொலுசோடு
காதலி வரக்கூடும் ...!!