காட்சிப் பிழைகள் 15

(கூடை சுமந்துவந்த ஏழைப் பெண்ணொருத்திக்கு ..)
"மென்மயக்க கீதங்கள்”
***

1
காதல் ஒரு முள்;

காதல் முள்ளைக்
குத்திக்கொள்வதால்
இதயங்கள்
ரோஜாக்களாகின்றன


2

பட பட வென்று மூடித்திறக்காதே
புறா விழிகளை …..
சிந்திவிடப் போகிறது
இமைச் சிறகில் சிக்கியிருக்கும் என் இதயம்

முத்தங்களால் என்னை
காயப்படுத்து ;
உன் காயங்களுக்கெல்லாம்
என் முத்தங்களைக் களிம்பாக்குகிறேன்

உன்னை எவ்வளவுதான்
ஊற்றி ஊற்றி நிறைத்தாலும்
காலியாகவே கிடக்கிறது கிண்ணம் ;
உன்னை எவ்வளவுதான்
வாரி வாரி இறைத்தாலும்
தீராமல் ததும்புகிறது எண்ணம் !

3

நீ என்னை திட்டினால்
கிளி பழம் கொத்துகிறது
நீ பேசாத போது
கிளி பறந்து விடுகிறது

மலர்கள் மௌனம் சாதிப்பது
அழகின் தவம்
உன் மௌனம் மலர்வதே
காதலின் வரம்

இந்த நெருப்பு…., நீரால் அல்ல
நெருப்பால் மட்டுமே நீங்கும்;
சொல்லாமல் தகிப்பதை
சொல்லி அணைத்துவிடு

நதியே நீ என்றாலும்
என் சிகரத்திலேயே உறைந்துவிடு !

4

நீ வந்த போது
வசந்தம் வரவில்லை ;
தொலைந்து போன வசந்தங்கள் எல்லாம்
திரும்பி வந்தன


வசந்த கூடுகளில் புணரும் பறவைகள்
என்னென்ன பேசுமோ ?
நாம் பேசுவதெல்லாம் வசந்தங்கள் என்று
அப் பறவைகள் எண்ணுமோ?


நட்சத்திரங்களின் வழியாக
இறங்கி வருகிறது இரவு
இரவின்மீது ஏறி நட்சத்திரங்கள் பறிக்கிறது
நம் உறவு


இலைகளால் அசையும் இயற்கை
அலைகளால் பிரபஞ்ச கீதம்
வாய்மையால் சுழலும் வையம்- - உன்
தாய்மையே எனது சொர்க்கம்


5

மனம்,
நீ மென்மயக்க நீச்சல் போடும்
மாயக் குளம்

கனவு,
இப்போதெல்லாம்
உனக்கான கஜல்

உயிருக்கு காதல் முகம்
காதலுக்கு நீ என்றால் உயிர்

உன் மடியின் தலை சாய்தலில்
ஜென்மங்கள் இளைப்பாறட்டும்


6

காதலை நீ…, ,என் கிராமத்து ஏழைப்பெண்ணே,
சிறகாய் விரித்தல்ல, ஒரு கூடையாய்ச் சுமந்து வந்தாய் ;:
கூடை நிறைய
வாழ்க்கைப் பூவன விதைகள் - அதில்
வாழும் மானுடக் கதைகள்

7

காதல்
ஒளியின் பக்கமே சாயும்
ஒரு வினோத நிழல் ;

நீ என் மீது
ஒளியாய் விழுகிறாய்
நான் உன்
நிழலாய்த் தொடர்கிறேன்


8

சாபமே வரமாக வேண்டும்
ஏதோஒரு சித்தன் எனக்கதைத் தரவேண்டும்

காதலின் கண்ணீர் நதிக்கரையோரம் - ஒரு
கல்லறை நானாக வேண்டும் - அதன்
மரணம் நீயாக வேண்டும்


9

இதுவரை தோன்றிக் கலையாத கனவொன்று
இரவு பகலெல்லாம் நீந்தும் உனை கொண்டு ;
இது ஒரு சித்திர மயக்கம் - இதை
எப்படி உன்னிடம் காட்டவோ?

இதுவரை யாரிலும் பிறவாத கஜல் ஒன்று
என்னிடம் உண்டு உனக்கென்று ;
இருந்தும் புரியாமல் தவிக்கின்றேன் - இதை
எழுதவோ……? வரையவோ…….? மீட்டவோ……..?


(..............கீதங்கள் இன்னும் மயங்கும் )




(மரபும் புதிது - கஜல் சோதனைக்கூடம் )
நீர் மலர்கள்
******************

போவதுதான் போகின்றாய் பறித்துப்போ நீர்மலர்கள்
நீர்மலர்கள் பூத்துத் ததும்பும்என் விழிக்குளங்கள்
அப்பன் அழுதாரோ ஆத்தா அழுதாளோ
எனக்கெதிரே நீநடத்தும் எனக்கான ஊர்வலங்கள்

காதலின் உயிர்விசையில் எதிர்செல்லும் விதியாக
சூழ்நிலையின் நேர்திசையில் சடங்குகளின் கைதியாக
கண்ணீர் எழுதும் கதைகளிலோர் கதையாக
எனக்கெதிரே நீநடத்தும் எனக்கான ஊர்வலங்கள்

கூந்தலை மூடும் கல்யாணத் திருமலர்கள்
கண்களில் ஓடும் காதல் மேகங்கள்
இதழ்களில் இன்னும் உலராத முத்தங்கள்
காலடியில் சருகுதிர்த்த கனவுகளின் சப்தங்கள்

எனக்கெதிரே நீநடத்தும் எனக்கான ஊர்வலங்கள்
போவதுதான் போகின்றாய் பறித்துப்போ நீர்மலர்கள்

எழுதியவர் : கவித்தாசபாபதி (26-Dec-15, 12:12 am)
பார்வை : 690

மேலே