அறிஞர் அண்ணா

தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை வலுவான சக்தியாக உருவாக்கியவரும் ‘அறிஞர் அண்ணா’ என பாசத்தோடு அழைக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாதுரை (C.N.Annadurai) பிறந்த தினம் (செப்டம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் (1909) பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கினார். குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார்.

l பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு பொருளாதாரம் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பயின்ற பள்ளியிலேயே சிறிது காலம் ஆசிரியராக வேலை பார்த்தார்.

l பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அரசியல் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். தி.க.வின் ‘விடுதலை’ பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார். பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.க.வில் இருந்து விலகி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். ‘திராவிட நாடு’ இதழையும் தொடங்கினார்.

l எழுத்துப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார். திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். இவரது ‘நல்ல தம்பி’ என்ற கதை 1948-ல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ‘ரங்கோன் ராதா’, ‘பணத்தோட்டம்’, ‘குமரிக்கோட்டம்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’ ஆகிய நாவல்கள் திரைப்படங்களாகின.

l நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சார்ந்த முற்போக்கு, சீர்திருத்த நாடகங்கள், மேடை நாடகங்களை எழுதியுள்ளார். சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். இவரது சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன. மணிக்கணக்கில், அடுக்குமொழியில் மடைதிறந்தாற்போல பேசுவதில் வல்லவர்.

l ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கை கொண்டவர். மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதை கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாக முன்மொழிந்தார்.

l இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் 1960-ல் இவரது தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. 1965-ல் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

l மாநிலங்களவை உறுப்பினராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, முதல்வரானார்.

l சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றினார். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

l அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 59-வது வயதில் (1969) மறைந்தார். இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளைகளில் தலா ரூ.5,000. இவைதான் மறைந்தபோது இவரிடம் இருந்த சொத்துக்கள்!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (26-Dec-15, 9:24 am)
பார்வை : 502

மேலே