சுனாமி

ஏ கடலே
மீன்களைச் சுமந்த
வயிற்றில் ஏன்
மீனவனைச் சுமக்க ஆசைகொண்டாய் ?

அவர்கள் ஒன்றும் நதியில்லை
உன்னோடு சங்கமிக்க

ஒரு கரையில் சூரியனை
விடியவைத்தாய்
மறு கரையில் மீனவனை
மடியவைத்தாய்

கடலே விருந்து கேட்டு
எமன் கொடுத்த கடிதத்தின்
எழுத்துப் பிழையோ?
மீன்களுக்கு பதில்
மீனவர்களைக் கொடுத்துவிட்டாய் ..

மொத்த நெஞ்சின் மூச்சைக்குடித்த
பித்த அலையே
உன் மீது வலை தொடுத்ததற்கா
எங்களை கொலை செய்தாய் ?

நெய்தல் நிலங்களுக்கு
சவத்துணியை ஏன் நெய்தாய் ?

மணல் வீடுகளை
அழித்தது போதும் என்றா
மனித வீடுகளை அழிக்கவந்தாய் ?

படிதாண்டா பத்தினிக்கடலே
படிதாண்டிவிட்டது உன் உடலே
பிலிப்பைன்ஸ் பூகம்பத்திற்கு பயந்தோ ?

மூன்றில் இருபங்கு போதவில்லை என்றா
மீதி ஒருபங்கையும் ஆட்கொள்ள
ஆட்களைக் கொல்ல வந்தாய் ?

கடலே உனக்குத் தெரியுமா
நீ விட்ட தண்ணீரைவிட
அவர்கள் விட்ட கண்ணீர்..
அதிகம் என்று ....

எழுதியவர் : குமார் (26-Dec-15, 3:15 pm)
Tanglish : sunaami
பார்வை : 231

மேலே