மார்கழிப் பூக்களின் தோழி பாடுகிறாள்
* மலர்களே மலர்களே வாருங்கள் - என்
மனதிலே ஆயிரம் கேள்விகள்
இதழ்கள் இருந்தும் ஊமையாய் - இங்கே
இருந்தது போதும் பேசுங்கள்
மேனியில் உள்ள மென்மையை - என்
தேசத்தின் மீதும் வீசுங்கள்
நேச சின்னம் நீங்கள்
* இன்னும் எத்தனை வாசங்கள்
இன்னும் எத்தனை வண்ணங்கள்
ஆண் பூ பெண் பூ பார்வைகள்
கண்டு நான் துள்ளிட ஆசைகள்
உடம்பைச் சுற்றிய பனித்துளி
உள்ளம் பற்றிய தேன் துளி
வண்டுகள் பருகிச் செல்லுமே
தென்றல் ஆறுதல் சொல்லுமோ
அன்பின் ஆழமே
அழகின் மூலமே
குளிரடித்தால் என் சுடச்சுட தாவணி போதுமா
வெயிலடித்தால் என் கூந்தலே குடையாய் வேணுமா
முள் வீச்சுக்கு
புயல் சாயுமா
* அட்சதை தூவிடும் போதிலும்
அஞ்சலி செலுத்தும் போதிலும்
மனதில் ஏதும் வார்த்தைகள்
தோன்றுமோ என்னிடம் கூறுங்கள்
இன்றைய தேதியில் உங்களின்
எண்ணிக்கை மொத்தம் என்னவோ
சில மணி நேர வாழ்விலே
மலரும் சிரிப்பே வாழ்க்கையோ
இறைவன் தும்மலில்
கவிதை பிம்பங்கள்
பனிக்காலம் இந்தப் பூமியில் பூக்களாய் ஆனதோ
பூவெல்லாம் பூப்புனித நீராட்டில் நாணுதோ
இவை பெண்மையோ
என்ன சொல்வதோ