இச்சமூகத்தின் அழிவற்ற ஓவியம் - உதயா
உன்னையும் என்னையும்
வறுமை தத்தெடுத்ததால்
உன்னிடமும் என்னிடமும்
அனாதை முத்திரையிருப்பதால்
அன்று என்னிடமிருந்த
பசியில் பாதியை பிடிங்கி
உன் பசியோடு சேர்த்துக் கொண்டதால்
இன்று நீயும் நானும் அண்ணன் தம்பி ...!
பரந்துக் கிடக்கும்
இம்மனித சாம்ராஜ்யத்தில்
மனிதம் ஆறடியில்
மனிதன் அதன் பிடியில்
ஏதோ பெயரில்லா
அதுவோ இதுவோ
இம்மண்ணில்
வாசம் செய்கிறது ...!
இப்போதெல்லாம்
உனக்கும் எனக்கும்
அடிக்கடி வரும்
அந்த மயக்கம்
பசியின் பிடியிலிருந்து
சில நாழிகைகளுக்கு
உணர்வு நிலையற்ற சிறைவொன்று
நம்மை வாடைக்கு எடுத்துச் செல்லும் ...!
உச்சிமுதல் பாதம்வரை
ஒருவகையான ஓட்டம்
நம்மில் கணம் கணம்
அரங்கேற
சத்தமற்ற நிலையில்
உன்னிலும் என்னிலும்
அதிபயங்கரமான குரலொலி
வெளிப்படுகிறது ...!
இன்று தன்னிலை இழந்த
எம்மை நீ அணைத்துக் கொண்டதில்
உன் வாயிற்று சூட்டில் என் பசியுடன் சேர்ந்து
என் உயிரும் கருகிவிட்டதால்
என் வாயிற்று சூட்டில்
கருகும் உன் பசியுடன் சேர்ந்து
நம்மில் மிஞ்சிய
உன் உயிரும் கருகிப் போகிறது ...!