இன்னொரு இரவு

**இன்னொரு இரவு...!**
பிணமென்றும் பாராது
பிய்த்து திண்ணும்
கழுகுகளாய் சில்லறை
வீசி
தேகம் சிதைத்திடும்
காமுகர் நாடும் சாமம்
நெருங்குகிறது...
கணிகையவள்
சாபம் பெற்றபடி...!
********
விடிந்தால் திருமணம்
குறைவதோ
இருபதாயிரம்!
மகள் வாழ்க்கை
என்னாகும்?!...
பதைத்திடும்
தாயுள்ளம்...!
********
வீசமுடிந்தது
வலைதான்... சிக்குவது
தன் வலையில்
மீனா?
சிங்களன் பிடியில்
தானா?!
புரியா புதிராய்
படகேறும் மீனவன்...!
********
"அப்பா..காலைல
நோட்டுப் புத்தகம் வாங்க
ரூ.300 வேணும்... டீச்சர்
அடிப்பாங்க...!" தேகம்
பிளந்திடும் வலிதாண்டி
தூக்கம் துறக்கும்
கூலியின் விழிகள்...!
********
துன்பம் துளியளவும்
குறையாது...
இன்னல் இம்மியளவும்
கரையாது...
இதோ
வந்து சேர்கிறது...
இவர்களின் வாழ்வினூடே
இன்னுமொரு இரவு!!!
*********************