காட்சிப் பிழைகள் - 17

என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடத்தில்
அன்பும் அரவணைப்புமா ?

நான் உன்னிடம் எதை வேண்டுவது
நட்பையும் நம்பிக்கையையுமா ?

உன் ஜன்னல்கள் உன்னிடத்தில்
எதை இசைக்கும் தென்றலையா புயலையா ?

நீ விரும்புவது பேரொளியையா
காரிருளையா ?

விளக்கிவிட்டுப்போனால் என் மறுஜென்மமாவது
உன்னோடு உயிர்த்திருக்கும் ...

**************************************************************************************

பாலைகள் எல்லாம் இப்போது
தகிப்பதில்லை ...
அதன் இரவையும் யாரோ
நனைக்கிறார்கள்..

காலம் காட்டும் கண்ணாடிகளுக்கு
வயதே ஆவதில்லை ..
காதலுக்கும் தான்...

நான்
என் காதல்
என் கண்ணீர்
என் சோகம்
என் சாளரம்
என் தனிமை
இவை என் ஒருமைகளின் பன்மை..

உன் சாலைகள் என்னை
எச்சரிக்கவில்லை இதயம்
உள்ளவர்களுக்கு
அனுமதி இல்லையென..

தனிமைவாசிகளின் முகவரியில்
முதலில் என் பெயர்
அடுத்து .............
என் இருப்பிடத்தின் பெயர்.

மாயை மௌனம் மரணம்
எதற்கும் பொருள்
ஒன்று தான்.. எல்லாம்
உன்னையே தாங்கி நிற்கின்றன..

மர்மம் நிறைந்த காதல்தான்
கடவுளுக்கும் காட்சிப்பிழை..
இதில் நான் எம்மாத்திரம் !

உன் தேநீர் கோப்பைகளை
வெறுக்கிறேன் எனக்கில்லாத
உரிமை அதற்கு ..

நாளை எனக்கு திதி
என் மனம் இறந்து
வருடம் ஆனது ஒன்று ..

விந்தைகளின் விசுவாசி நீ

ஈர விழிகளுடன் நான்
எழுதிய எந்த வரிகளிலும்
நீ நனைந்தது இல்லை .

கனாக் கண்டேன் தோழீ நான்
என உருகும் நாச்சியார்கள்
மறுபிறவி கேட்பதே இல்லை ...

முன்னொருநாள் பிறை நீ
பின்னாட்களின் கறை நீ
வானம் மட்டும் நிறம் மாறாமல் ...

காதலில் தோற்போர்க்கு கவிதை
மட்டும் சொந்தம் மிக
முக்கிய இயற்கை நியதி ..

உன் கையால் தான் மரணம் வேண்டும்
உன்னை நேசித்தது தான்
என் பிழைகளில் தண்டனைக்குரிய
பெரும் பிழை .......


- மகிழினி

எழுதியவர் : நித்யா . பா (28-Dec-15, 8:00 am)
பார்வை : 585

மேலே