பௌர்ணமிப் பொழுதுகள்-சுஜய் ரகு

நாம் நடக்க
குறுக்கிடும் புதர்களை
வெட்டத் துணிகிறோம்

கண்ணீர் சிந்தியேனும்
குத்திய முள்ளைக்
களைகிறோம்

நதி வழி போக
நீச்சல் அறிகிறோம்
பாலையின் பயணத்தில்
புதையப் புதைய
மீள்கிறோம்

தோல்வியை மட்டும்
கடப்பதில்லையே ஏன் ?

********************************

தோல்வியின் கலை
அறிந்தவனே
வெற்றியின் மேடை
ஏறுகிறான்

பறக்கையில் சிறகுதிர்தல்
தோல்வியாவன
சிறகுதிர்ந்த இடத்திலேயே
பறவைகள்
படுத்துவிடுகின்றனவா ?

துவண்டுவிடுதல்
உணர்வுகளின் ஓய்வுதான்
நிரந்தர ஓய்வு
நோயல்லவா?

தோல்விகள் உன்னை
மீட்டெடுக்கும்
போதி மரம்
கேள்விகளை
அங்கிருந்து செதுக்கு

********************************

ஒவ்வொரு
தோல்வியையும்
நட்சத்திரமெனக் கொள்
உன்னை விடவும்
வானம் தோற்றிருக்கும்

ஓவிய நிலவை
ரசிக்கப் பழகு
பௌர்ணமிப் பொழுதுகள்
பரவசப் படுத்தும்

உனக்கான தோல்விகளின்
தீர்வை
பிறர் தோல்விகளிலிருந்து
ஆய்ந்தெடு

வாழ்க்கைப் புத்தகத்தை
தோல்விகளின்
அட்டைகளால் அலங்கரி
வெற்றி
நிறைந்த வார்த்தைகளாய்
இருக்கட்டும்...!!

-சுஜய் ரகு-

எழுதியவர் : சுஜய் ரகு (28-Dec-15, 2:57 pm)
பார்வை : 142

மேலே