9ஆதாமின் அப்துல்லா – பொள்ளாச்சி அபி

அடுத்த வருடம் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாய் பவானி ஆற்றின் வெள்ளப் பெருக்கு பெரிதும் குறைந்து போனது.போதிய மழையும் இல்லாமல் பக்தூரில் ஏற்பட்ட கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது.சொந்த நிலமில்லாததால் விவசாயக் கூலியாக இருந்தவர்கள்,அன்றாட பிழைப்புக்கு என்ன வழியென்று யோசிக்கும் காலமும் வந்தேவிட்டது.

ஊரும் உறவும் என்று இருந்தாலும்,சில வாரங்களுக்கு மேல் அங்கே காலம் தள்ள முடியவில்லை.தாயும் பிள்ளையுமாகவே இருந்தாலும் வாயும் வயிறும் வேறுதானேயப்பா..அவர்களும் பாவம்..உங்களை எத்தனை நாளுக்கு ஆதரிக்க முடியும்..? என்ற கேள்விகள், பெரும்பாலானவர்கள் மற்றவர்களிடம் கேட்பதும் வாடிக்கையாகிக் கொண்டிருந்தது.

சில நெசவாளர்களும்,முஸ்லீம்களும் பக்தூரை விட்டு,வெவ்வேறு ஊர்களுக்கு பிழைப்பு தேடி இடம்பெயர்ந்தனர்.

பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருவோரும்,பாத்திமாவிடம் மார்க்கக் கல்வி பயில வருவோரும்கூட கணிசமாகக் குறைந்திருந்தனர். நிக்கா,பாத்திஹா என விஷேசங்களுக்கு அழைப்பவர்களின் எண்ணிக்கையும் தானாகக் குறைந்துபோனதால்,நாகூர்மீரானுக்கு கிடைத்துவந்த வருமானமும் படிப்படியாகக் குறைந்துபோய்க் கொண்டிருந்தது.

பஞ்சம் என்பது பொதுவான வியாதிபோல எல்லோரையும் பீடித்திருந்ததால் முஸ்தபாவும், நாகூர்மீரான் குடும்பத்திற்கு எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

பக்தூரின் பஞ்சம் பட்டினியால் மக்களைத் தவிக்கவைத்த அதேநேரம்,கோயமுத்தூரில் பல உயிர்களைப் பலிவாங்கியபடி, கடும் வேகத்தோடு பரவிக் கொண்டிருந்த பிளேக் நோயில்,அக்காள் கைருன்னிசாவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், “உடனடியாக கிளம்பி வரமுடியுமா.?” எனவும்,பாத்திமாவிற்கு செய்தி வந்தது.

‘பாவம்..,தாய்ப்பால் அருந்தும் கைக்குழந்தையோடு அவள் எப்படித் தவிக்கிறாளோ..?’ அக்காவின் மீதுள்ள பாசத்தால் பாத்திமா உருகினாள்.

அடுத்தநாள்,வழிச் செலவுக்கென புரட்டிய சில ரூபாய்களோடு, கணவன்,குழந்தை அப்துல்லாவுடன் கோயமுத்தூருக்கு புறப்பட்டாள் பாத்திமா.

பிறந்த வீட்டில் அப்பாவிற்குப் பிறகு,தனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தவள் கைருன்னிசாதான்.ஒடிசலான தேகமாய் இருந்தாலும் வீட்டுவேலைகள் அத்தனையும் தனி மனுஷியாக சுறுசுறுப்பாக செய்துவிடுவதில் கெட்டிக்காரி. கடைக்குட்டி என்பதால் தன்னை ஒருவேலையும் செய்யவிடாமல்,ஒரு தாயைப் போலப் பார்த்துக் கொண்டாளே.!

அஜீசுடன் நிக்கா முடிந்து செல்லும்போது,அவள் அழுத அழுகை..உன்னை ஒரு அநாதை மாதிரி விட்டுட்டு போறேனே பாத்திமா..அல்லா என்னை மன்னிப்பாரா..? என்று எப்படிக் கதறினாள்.

அப்பாவிற்கு உதவியாக தான் இங்கேயே இருக்கவேணடிய அவசியத்தையும்,தன்னால் வீட்டுக்காரியங்களை நிர்வகிக்க முடியும்..என்றும் பலவிதமாய் அவளுக்கு நம்பிக்கை ஊட்டிய பின்தானே,அவள் ஆறுதலடைந்தாள்.

வரிசையாக இரண்டு பெண்குழந்தைகளையும்,இரண்டு ஆண் குழந்தைகளையும் அவள் பெற்றபின்னும் கூட,தன்னை மூத்த மகள் போல பாவித்தாளே..!

அவ்வளவு பாசம் மிகுந்தவளுக்கு,ஆண்டவன் கொடுத்த சோதனையை நினைத்து, பாத்திமாவிற்கும் இப்போது வருத்தமாயிருந்தது.

கைருன்னிசாவின் நான்காவது மகன் இப்ராகிம்,பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால்,அஜீஸ் இறந்துபோனார்.

நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு,அவள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இப்போது அவளுக்கு பிளேக் நோய்..,

இறையச்சமும்,ஐந்து வேளை தொழுகையும், நற்குணங்களும், குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசமும் வைத்திருந்த அவளுக்கு, இந்த உலகத்தில் நிம்மதியாக வாழத் தகுதியில்லையா..? ஏன் இப்படி..? பின் யார்தான் இங்கே வாழ்வது..? பாத்திமாவின் மனதுக்குள் எண்ணங்கள் தாறுமாறாக அலையடித்தது.

பாத்திமாவைப் பார்த்ததும்,ஒளியிழந்த கைருன்னிசாவின் கண்களில் லேசான நம்பிக்கை பிரகாசித்தது.நைந்துபோன சிரிப்புடன் “வா..பாத்திமா..” படுக்கையில் கிடந்தபடியே தீனமான குரலில் வரவேற்றாள்.

நாகூர் மீரானைப் பார்த்ததும் “அஸ்ஸலாம் அலைக்கும்..” என்றபடியே, நோயால் வலுவற்றுக் கிடந்த தனது கைகளினால், படுக்கையிலிருந்து கொண்டே தனது முந்தானை முக்காட்டை சரிசெய்து கொள்ளவும் அவள் தவறவில்லை.

அருகில்,அமர்ந்த பாத்திமாவின் கைகளை எடுத்து ஆறுதலாய் தனது நெஞ்சில் வைத்துக் கொண்டாள் கைருன்னிசா. மிக பலவீனமாக துடித்துக் கொண்டிருந்த அவளின் இதயஒலி, பாத்திமாவிற்கு மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது.

கைருன்னிசாவின் மூத்த மகள்கள் மாஜுவும்,ஜெயராவும், அப்துல் சுக்கூரும்; கண்களில் தங்கிவிட்ட நிரந்தரமான சோகத்தோடு,தாயைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தனர். ஒன்றரை வயதான குழந்தை இப்ராகிம்,மழலைக் குரலால் அம்மாவை அழைத்தபடி, கைருன்னிசாவின் மார்பை நோக்கியே, அவ்வப்போது சிணுங்கலுடன் தாவிக் கொண்டிருக்க, அவனை இழுத்து,இழுத்து தனது மடியில் வைத்துக் கொண்டிருந்தாள் மாஜு.

குழந்தைகள் நால்வரையும் ஒருசுற்றுப் பார்த்த கைருன்னிசாவின் கண்களிலிருந்து, தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது. “பாத்திமா..எனது குழந்தைகள்..குழந்தைகள் அநாதையாயிடுவாங்களோன்னு எனக்கு பயமாயிருக்கு..” தேம்பலினூடே திக்கினாள் கைருன்னிசா.

“அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது அக்கா.நீ சீக்கிரம் குணமாயிடுவே..கவலைப் படாதே..,”

“இன்ஷா அல்லா.., பாத்திமா.. ஒருவேளை நானும் மௌத்தாகிட்டா..என் குழந்தைகளை நீதான் பத்திரமா கரைசேக்கணும்..”

“இப்படியெல்லாம் பேசாத அக்கா..நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காது..” பாத்திமாவிற்கு வேறு என்ன வார்த்தைகளில் ஆறுதல் சொல்வது என திணறலாய் இருந்தது.

“ஆமாம் பாத்திமா..என்னோட படிப்பு..,என்னோட விருப்பம்.., என்னோட நிக்கா.., என்னோட மரணம்.., எதுவுமே நம்ம நெனக்கிற மாதிரி.. ஒண்ணுமே நடக்காதுன்னு எனக்கும் இப்போ நல்லாத் தெரியுமே..!” கைருன்னிசாவின் இதழ்க் கடையோரம் விரக்தியாகவும், கேலியாகவும் ஒரு சிரிப்பு உதிர்ந்தது.

‘பாவம் இவள் எதையெல்லாம் நினைத்துக் கொண்டு சொல்கிறாளோ தெரியவில்லையே..’ பாத்திமாவிற்கு எதுவும் புரியவில்லை. கைருன்னிசாவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட பாத்திமா, “நீ கொஞ்சநேரம் அமைதியாத் தூங்குக்கா.. நான் குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செஞ்சு குடுக்கறேன்..” பாத்திமா எழ முயற்சித்தாள்.

அவளின் கையை இறுக்கமாகப் பற்றிய கைருன்னிசா,ஏதோ சொல்ல விரும்புவதை உணர்ந்து குனிந்தாள் பாத்திமா, “சொல்லுக்கா..”

இப்ராகிமைப் பார்த்த கைருன்னிசா..,சற்றே தயக்கத்துடன் சற்றுத் தள்ளிநின்றிருந்த நாகூர் மீரானை தயக்கத்துடன் பார்க்க, தனிமையில் பேச விரும்புகிறாள் போலும் என்று உணர்ந்த நாகூர் மீரான்,அங்கிருந்து முன்வாசலுக்கு நகர்ந்தார்.

பாத்திமாவை இன்னும் சற்று நெருக்கமாக தன்பக்கம் இழுத்த கைருன்னிசா,அவள் காதில் கிசுகிசுத்த குரலில், மன்றாடுவதைப் போல இருந்தது.பாத்திமாவின் முகத்தில் துல்லியமான சிறுஅதிர்வு ஏற்பட்டது.

விநாடி நேரமே நீடித்த அந்த அதிர்வு,உடனடியாக நீங்கியதை சாந்தம் வழிந்த அவளின் கண்களில் தெரிந்தது.“நீ..கவலைப் படாதேக்கா..நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்றபடியே, மாஜுவின் கையிலிருந்த இப்ராகிமை எடுத்துக் கொண்டு, சமையலறைப் பக்கம் போனாள். அம்மா போவதைப் பார்த்த பாத்திமாவின் குழந்தை அப்துல்லா அழுதபடி தவழ்ந்து கொண்டே, பின்னால் சென்றான்.

அப்துல்லாவின் அழுகையைக் கேட்டு,அவனை வெளியில் எடுத்து வரலாம் என்று மீண்டும் உள்ளே வந்த நாகூர்மீரான், அப்துல்லாவை எடுத்துக் கொள்வதற்காக சமையலறைக்கு வந்தார்.

பாத்திமா அங்கே அமர்ந்து,கைருன்னிசாவின் குழந்தை இப்ராகிமுக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தாள்.

அப்துல்லாவை எடுத்துக் கொண்டு மௌனமாய் வெளியேறிய நாகூர்மீரானைப் பார்த்த,கைருன்னிசாவின் கண்கள் நன்றியால் மின்னிக் கொண்டிருந்தது.

------------------ தொடரும்

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (28-Dec-15, 4:38 pm)
பார்வை : 139

புதிய படைப்புகள்

மேலே