மௌன ராகம்

மௌன ராகம்
------------------------
உன்
மௌனம்,
சம்மதமெனில்
நான் முத்தத்தை
முன்மொழியவா.?
முழுங்கிவிடவா.?

ஆடைக்கேற்ற
அணிகலன்களில்
உன் மௌனம்
மட்டும்தான்
மாறுபடுகிறது.!

கண்ணாடி பார்த்து
அணிவாய் யாவும்.
மௌனம் மட்டும்தான்
நீயென் கண்களைப்பார்த்ததும்
அணிவது.!

நீரூற்றியும்
பூக்காத ஒரு ஒற்றைச்செடி
நிகராகிவிடுகிறது
உன் மௌனத்திற்கு.!

என் சொல்லின்
ஆற்றலைவிட
உன் மௌனத்தின்
பேராற்றல்
உதட்டுச்சாயம்
பூசிக்கொண்டு உறங்குகிறது.!

கவிதைக்கான
எந்த சொல்லும்
என்னிடம்
இல்லாதபோது
உன் மௌனத்திடம்தான்
நான் கையேந்தி
நிற்கின்றேன்.

எழுத்துவடிவமில்லா
எத்தனையோ
மொழிகளின் மத்தியில்
உன் மௌனத்தை
மட்டும் நான்
எப்படியோ
மொழிபெயர்த்து விடுகின்றேன்.!

ஆமையின் ஓடென
நீ மறைந்துகொள்ள
வசதியாய் இருக்கிறது
உன் மௌனம்.!

மௌனத்தின் சொற்கள்
மிக சொற்பமே
அது ஓசைகளற்று
ஒரே நேர்கோட்டில்
இதயத்தை துளைக்கிறது.

வெற்றுக்கூடுகளில்
வெளியே தலைநீட்டும்
சிறகு முளைக்காத
சில மௌனங்கள்
பறக்கும் என
பார்த்திருக்கிறேன்.!!

நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (29-Dec-15, 5:33 pm)
Tanglish : mouna raagam
பார்வை : 1074

மேலே