அப்துல்கலாம்

மானிட வர்க்த்தின் மாணிக்கமே
மாணவ உலகின் காணிக்கையே
விண்வெளி ஆய்வின் வேதாந்தியே
மண்ணில் நடந்த மகாநதியே

வரமாய் வந்தாய் வையத்தில்
வெறுத்தாய் மனதில் கலகத்தை
விதைத்தாய் நெஞ்சில் உரத்தினையே
வாழ்ந்தாய் நம்பிஉன் கரத்தினையே

கிளிஞ்சல் மண்ணில் நீபிறந்தாய்
கீர்த்திகள் பலபெற்று நீசிறந்தாய்
கிழித்தாய் அணுவை ஆய்வகத்தில்
கிரீடம் அடைந்தாய் தாயகத்தில்

உண்மையின் உறைவிடம் நீயானாய்
தன்மை குணத்திற்கு தாயானாய்
கனவுக்குப் புதியபொருள் சொன்னாய்
கனவுகள் பலித்திட உழைக்கச்சொன்னாய்

எளிமை வாழ்வில் ஏற்றம்கண்டாய்
துளியும் கரையின்றி நீவாழ்ந்தாய்
அன்பை பிறர்க்கு அள்ளித்தந்தாய்
ஆராய்ச்சிக் கூடத்தில் பள்ளிகொண்டாய்

உன்போல் மனிதர் யாருண்டு?
உலகத்தில் உனக்கோர் பேருண்டு
நீசொன்ன சொல்லுக்கு வேருண்டு
நித்தமும் போற்றிட பாருண்டு

அணுவால் அடைந்தாய் முகவரியை
அகற்றிவிட்டாய் அதில் இழுபறியை
வணங்கி வந்தாய் நீஇளம்பிறையை
வாழவைத்தாய் இளம் தலைமுறையை

சமாதானம் என்ற சன்மானம்
சகலர்க்கும் நீதந்த வெகுமானம்
கடைபிடித்தாய் என்றும் நிதானம்
காத்தாய் வாழ்வில் தன்மானம்

ஊழல்கள் அகற்றிட உறுதிகொண்டாய்
ஊனமுற்றோர்க்கும் கருவி கண்டாய்
திருமணம் வெறுத்து தனியாளாய்
திக்குகள் எட்டிலும் புகழ்கொண்டாய்

திருக்குரான் தினம் படித்தாலும்
திருக்குறள் வழியில் நீநடந்தாய்
சிலுவையை சுமந்தாய் உன்மனதில்
கொலுவைத்தோம் உனை எம்மனதில்

அகிலத்தில் கண்டாய் பலஅரங்கம்
அறிவினிலே நீ பெரும்சுரங்கம்
இணையில்லை யாரும் எம்மருங்கும்
இதயம் உனக்கோ சொக்கத்தங்கம்

தாய்நாட்டை நிதம் நேசித்தாய்
தவறாமல் நூல்பல வாசித்தாய்
திருமணம் என்றால் யோசித்தாய்
தியாக வாழ்க்கையில் பிரவேசித்தாய்

எழுவோம் அனைவரும் உன்வழியில்
எப்போதும் நடப்போம் உன்மொழியில்
மறவோம் உன்னை எந்நாளும்
மனிதாஉன் சொற்கள் மண்ணாளும்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (30-Dec-15, 5:55 am)
பார்வை : 119

மேலே