கஸல் – ஒரு அலசல்

.தலைவன் தலைவிக்கு இடையே தோன்றும் நிபந்தனை அற்ற அன்பினால், காதலால் ஏற்படும் இழப்பு அல்லது பிரிவி்னை, சாதலுக்குத் தூண்டும் வலியினை, அழகுபடக் கூறும் கவிதை வெளிப்பாடு, உணர்ச்சியின் மெய்ப்பாடு கஸல் ஆகும்.

அடிதொறும் அடிதொறும் சமச் சீர் கொண்டும் எதுகையும் மோனையும் எழிலாய் அமைந்தும், சந்த ஓசை நல மிக்க இரு வரிப் பாடலும் அதை ஒட்டிய ஒரு பல்லவியும் இணைந்த கவிதை வடிவமே கஸல் ஆகும்.

முதல் முதலாக கஸல் அறிமுகப்படுத்தப்பட்டது உருது மொழியில் ஆகும். கஸல் பாடல்களில் எதுகை மோனை போன்ற இலக்கண அமைப்புகள் இல்லை. ஆனால், உருது மொழியில் கஸல் கவிதை தொடுத்தவர்கள், இயைபுத் தொடை அமைப்புடன் கவிதைகள் வடித்தனர். அதனால், கஸல் என்பது இசைக்கவிதை நடை என்பதோடு பஹர் எனப்படும் சந்த அழகு வரிதோறும் சிந்தி வருவதால், தமிழ் வழி கஸல்களில் எதுகை மோனை இருந்தால் ஓசை நயம் ஓங்கி நிற்கும்.. .

உலகில், முதல் முதலில் காதல் நோயில் தோன்றிய கவிதையாக திருவிவிலியத்தில் நாம் இனிமை மிகு பாடல் என்னும் ஒரு முழு புத்தகத்தையே காண்கிறோம். உதாரணமாக, அதிகாரம் 2.இல் முதல் ஐந்து வசனங்கள்.

”1. சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்: பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.

2. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.
3. காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்: அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.
4. திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்: அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!
5. திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்: கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன். காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!”

இவற்றில் கஸலுக்கான இலக்கணம் ஏதும் இல்லை என்றாலும், நாயக, நாயகி பாவனையில், மனிதன் இறைவனைத் தேடும் விதமாக இவை அமைந்து, ஒரு வித காதல் வலியை எடுத்து இயம்புவனவாக அமைந்து உள்ளன.


இதனைத் தொடர்ந்து, இசுலாமிய மறை தோன்று முன்னரே கஸல் அரேபியாவில் உருவெடுத்தது. அரபு மொழியாகிய ‘க’—‘ஸல்’ ஆகியவை அரபுச் சொல் ஆகிய ‘கசிடா’விலிருந்து கிளைத்தது ஆகும். கஸலின் கட்டமைப்பு ஆங்கில பெட்ரார்க்க சானெட் வகைக்கு இணையானது. கஸல் பாடுபவரின் பெயர் (தகல்லுஸ்) மக்தா எனும் அரபு பாரம்பரிய முறைப்படி, கஸலின் இறுதி கண்ணிகளில் சேர்த்து வெளிப்படுத்துவர் (பெட்ரார்கன் சானெட் என்பது பெட்ரார்க் என்பவரால் வடிவமைக்கப்பட்டது அல்ல. மாறாக, இலக்கிய மறுமலர்ச்சி காலத்தில்உரு மாற்றம் அடைந்த கவிதை வகை ஆகும். , சானெட் வடிவமாகிய 14 வரிகளில் முதல் எட்டு வரிகள் ஆக்டேவ் எனப்படுவது ஒரு வகை ஒலியிணக்கத்தில், அதாவது, அ, ஆ, ஆ, அ அ, ஆ ஆ அ என்ற வரிசையிலும், அடுத்த செஸ்டெட் எனப்படும் 6 வரிகள், இ,ஈ,உ, இ,ஈ, உ. எனப்படும் ஒலி இணக்க வகையில் எழுதப்படும் . ஆக்டேவ், பாடுபொருள் அல்லது கருப்பொருள் பற்றி விவரிக்க, செஸ்டெட், உரிப்பொருள் பற்றி எழுதப்படும். மொத்தத்தில் 14 வரிகளில் சானெட் பாடல் அமைந்து விடும்).


12 ஆம் நூற்றாண்டில் இது தெற்கு ஆசியாவில் பரவி, சூஃபித் துறவிகளின் தாக்கத்தினால், புதிய இசுலாமிய சுல்தான்களின் அரச தர்பார்களில் பாடப் பெறத் துவங்கியது. முதலில், அரபி, தறி மற்றும் உருது மொழி கவிதைகளாக இருந்த கஸல், தற்போது அனைத்து மொழியினராலும் ஆர்வமுடன் ஏற்கப்பட்டு, உள்வாங்கப்பட்டு, உணர்ச்சிக் கவிதையாக உருக் கொண்டு படைக்கப்படுகிறது.

பெர்சிய நாட்டு ரூமி மற்றும் ஹபீஸ் ஆகியோரால் முதல் முதலாக எழுதப்பட்ட கஸல் கவிதை, ஆட்டொமான் பேரரசுகள் காலத்தில் கவி ஃபூஸுலியும், வட இந்திய தேசத்தில், மீர்ஸா கலீப் மற்றும் முஹமது இக்பால், வங்காள தேசத்தில், காஸி, நஸ்ருல் இஸ்லாம் ஆகியோர் வாயிலாக அகில உலக அரங்குகளில் வலம் வர ஆரம்பித்தது.

19 ஆம் நூற்றாண்டில் கேதேயின் முழு ஆதரவுடன், ஜெர்மனியில் பிரபலமான கஸல், ஆகா ஷாஹீத் அலி எனும் காஷ்மீரக் கவிஞரால் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் அசலாகப் படைக்கப்பட்டு அகில முழுவதும் அரங்கேற்றப்பட்டது..

காதலின் வலி, ஒரு நோயாக, சாவாக, ஒரு கொல்ல உதவும் ஆயுதமாக மிகைப் படுத்தப்பட்டு எடுத்தாளப்பட்டு எழுதுவதே கஸலின் சிறப்பு ஆகும். “அம்பு விழிகள்” போன்ற பதங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக அமையும்.

“நாமா தனம்” எனத் தொடங்கும் அமீர் குஸ்ரூ எழுதிய கஸலின் ஒரு பகுதி என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டது பின் வருமாறு:

நேற்று இரவு நான் இருந்த இடம் எது வியக்கிறேன்
என்னைச் சுற்றி பாதி கொல்லப்பட்ட காதல் பலிகள்
வேதனையில் சுண்டி விடப்படுவதாக நினைக்கிறேன்;
தூலிப் மலரின் முகமும், சைப்ரஸ் மர உ்ருவமுடன்
அன்பான ஆரணங்கு ஒருத்தி காதலர்களின்
இதயங்களோடு இரக்கமின்றி விளையாடுவதேன்.!

ஆகா ஷாஹீத் அலியின் கஸல் ஒன்று அடியேனின் மொழியாக்கத்தில் பின் வருமாறு;

உனது காதலுக்காக என் போட்டியாளரையா
நீதான் அவர்களை எல்லாம் அழைத்தாயா!
இது மிகப்பெரிய அவமானம் இன்றிரவு
நல்லதோர் பிரியா விடை அல்ல அவர் வரவு!
மற்றும் ஷாஹீதாகிய நான் கொலையுறாமல் தப்பித்தேன்
கடவுள் என் கரங்களில் அழுகின்றார்
இஸ்மாயிலே! இன்றிரவே, எனை எடுத்துக் கொள்ளேன்.

“காகிதப் படகுகள்“ எனும் தலைப்பில் ஷபீப் ஹைதரின் கஸல் ஒன்று எனது தமிழாக்கத்தில் கீழ்வருமாறு.

இக்காதல் என்னை குருடாக்கினால் யாராவது சொல்லட்டும்
காலையும் மாலையும் ஏனுன் முகம் தெரிகிறது எனக்கு மட்டும்.
என் இதழ் வடிப்பது வெறும் கவிதை அல்ல,
என்னுணர்வுகள், என் நம்பிக்கை, என் கனவுகள் நான் சொல்ல.

ஆனால் அரபு மொழியில் கஸல் தோன்றுவதற்கு முன்னரேயே, தமிழ் இலக்கியத்தில் மரபுகளும், மாற்றங்களும் தோன்றி இருப்பதையும், மரபுகளைக் காக்கவென்றே சங்கப் பாடல்கள் எழுதப்பட்டதால், அவை தம் காலத்தை பிரதிபலித்ததோடு, தமக்கு முற்பட்ட காலத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன.

வாழ்க்கையை அகம், புறமெனக் கொண்டு வாழ்வது தமிழர் நாகரிகமாகும். அகம்—ஓர் இல்லம், வீடு. அகம்—மனம், மனத்துளதாகிய காதல். காதல் வாழ்வும் (களவு), குடும்ப வாழ்வும் (கற்பு) அகமெனப்பட்டன. அகமல்லாதன யாவும் , கொடை அளி, செங்கோலாட்சி, அலுவலகம், போர், வெற்றி, தோல்வி எல்லாம் புறமெனப்பட்டன. இவையே இலக்கியமாகும்பொழுது, காதல் வாழ்வும், கற்பு வாழ்வும் அகம் எனப்பட்டன. அகம் அல்லாதவை எல்லம் புறமெனப் பட்டன. எடுத்துக் காட்டாக, சாவு பற்ரிய அவலம் அகத்தில் பாடப்படுவதில்லை. காதலியை இழந்த காதலனின் ‘தபுதார நிலை’ மற்றும், காதலனை இழந்த காதலியின் ‘தாபத நிலை” எல்லாம் புறத்திணைப்பாற்பட்டன. அகம் ஏழு திணைகளாகவும், புறம் ஏழு திணைகளாகவும் வகுக்கப்பட்டான.

அன்றைய களவு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களை, அகப்பாடல்கள் மிக நுட்பமாகவும், நாகரிகமாகவும் வெளிப்படுத்துகின்றன. சில பாடல்களில் வெளிப்படையாக வரும் ‘காதல் தோல்வி” பற்றிய கருப் பொருள் அடிக் குறிப்பால் மறைக்கப்பட்டு அல்லது நாகரிகமாக மாறியுணர வழி வகுக்கின்றன.

கலிப்பாக்களில் வரும் தாழிசைகள் நாடோடிப் பாடல்கள் பாங்கில் தலைமை சான்றன. சிலம்பில் காணப்படும், கானல் வரி, ஊசல் வரி, கந்துக வரிகள் இத்தகையவை. இவ்வகை யாப்பு வடிவம், இசையுடன் பலர் கூடி ஆடிப் பாடுவதை நினைவூட்டுவதால் பாடும் உரிப் பொருள் செய்திகளும் சிறிது வெளிப்படையாய் அமைந்துள்ளன.

கானல் வரிப்பாடலில் ஒன்று எடுத்துக்காட்டாக.

நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை. 49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. 50

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14


திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே 16

பொதுவாகவே தமிழர் தம் பாடல்கள் இசையோடு பாடப் பெற்றன என்பதை பாணர் என்ற சொல்லும், இசையுடன் நடனம் ஆடினர் என்பதை கூத்தர் என்ற சொல்லும் விளக்கும்போது, இசைக் கருவிகள் பலவும் கொண்டு பாடல்கள் சேர்ந்து பாடினர் என்பது பரிபாடல் 12:40-45 இல் உள்ள பாடல் வாயிலாக நம்மால் அறிய இயலும்

ஒத்த குழலின் ஒலிஎழ; முழவு இமிழ்;
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து; சீர்தூக்கி; ஒருவர் பிற்படார்’
நித்தம் நிகழும் நேர் இறை முன்கையில்
அத்தக அரிவையர் அளத்தல் காண்மின்

குழல் வழியாக நேரடியாக முழவுக் கருவிகள் சுருதி சேர்க்கப்பட்டு, மத்தரி எனும் பறை வகையும், தடாரி எனும் உடுக்கையுடன், மகுளி ஒளியும் சேர்த்து இசைத்தனர் என்பதும், ஒத்து அளந்தும் ஒருவரும் பிற்படாமல் சேர்ந்து இசைத்தனர் என்பதும் நமக்குத் தெளிவாகும்.

நெய்தற் கலியில் 142 முதல் 147 வரை உள்ள பாடல்கள் நச்சினார்க்கினியரால் “பெருந்திணைக்” குறிப்புடையன என விரிவாக விளக்கப் படுகின்றன

'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இரும் கங்குல், நம் துயர் அறியாது,
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப்
புதுவது கவினினை' என்றி ஆயின்,
நனவின் வாரா நயன் இலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்
நலம் தாராயோ?' எனத், தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப்
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் -
'முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' எனத்
தலையுற முன் அடிப் பணிவான் போலவும் -
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,
'பேதையை பெரிது' எனத் தெளிப்பான் போலவும்
ஆங்கு;
கனவினால் கண்டேன் - தோழி! - 'காண்தகக்
கனவின் வந்த கானலம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு' என,
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே

இப்பாடல்களில் தலைவி, தன்னைக் கைவிட்டுப் போன தலைவனை நினைந்து, தெருவெல்லாம் அலைந்து அரற்றி அழுகின்ற காட்சி, கண்ணகி மதுரை தெருக்களில் புலம்பி அழுத காட்சியை விட கொடுமையாக உள்ளது.

இதைப் போலவே, உணர்வு மிகுந்தும், வருணனை குறைந்தும் விளங்கும் குறுந்தொகைப் பாடல்கள் அகத்திணையின் உயிரோட்டத்தைக் காட்ட வல்லன. தலைமகள், தோழியிடம், தலைவனின் அன்புடைமையை வற்புறுத்தும் சூழல் வரும் வேளையில், அவளது அக்காதல், நிலத்தினை விடப் பரந்ததாக, வானை விட உயர்ந்ததாக, நீரை விட ஆழமானதாக விளங்குவதெனக் கூறுகிறாள் பாடல் எண் 3.ன் வாயிலாக. .

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே..

இதைப் போலவே, பிரிந்த தலைவன், உரிய காலத்தில் திரும்பவில்லை என்பதால், தலைவி சோகமே வடிவாயினாள்; உள்ளங்குமைந்தாள். வீட்டினுள்ளிருந்து பலகணி வழியாகப் பறவைகள் மாலை நேரத்தில் கூடு நோக்கிப் பறந்து போவதைப் பார்க்கிறாள். அது அவள் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. பாடல் எண் 9.இல்

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையிண் விரையுமாற் செலவே.

சங்க இலக்கியங்களில் காணப்படும் நாட்டுப்புறக் கூறுகளாக ஒத்துக் கொள்ளப்பட்ட கையறுனிலைப் பாடல்களை ஒப்ப இரமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவிலும், முறையீட்டுக் கண்ணி, காதல் நோய் தருவதாக இறைவனை நோக்கிப் பாடப்படுகிறது. எடுத்துக் காட்டாக,

கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட்டறுக்குதடா

இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா

இவ்வாறு சங்க காலத்தில் மட்டுமின்றி எக்காலத்திலும் பரிமளித்த இந்த காதல் நோய் கவிதை வடிவம், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இந்துஸ்தானி, உருது, மலையாளம், கன்னடம், தமிழ் என பெரும்பான்மை இந்திய மொழிகளிலும் இயற்றப் பட்டு இருக்க, தமிழில் ஈரோடு தமிழன்பனின் கஸல் கவிதைகள் மட்டுமே, கலைஞர் தொலைக் காட்சியில் ஒலி பரப்பு செய்யப்பட்டு, திரு சம்சுதீன் அவர்க்ளால் பாடப் பட்டு வெளி வந்துள்ளது இதனை யூ டியூபில் கேட்ட்டு களிக்கலாம்..மகா கவியின் மற்றொரு கஸல் நாம் சுவைக்க,

நிலவு பயணிக்கவே நீலவானம்
பிறகேன் கலந்தது அதில் கார்மேகம் /////
வாசம் வீசவே மலர்களின் மலர்ச்சி
பிறகெதற்கு கூர் முட்களின் ஆட்சி/////
உனைக்கண்டு ரசிக்கவே எனக்கிரு விழிகள்
பிறகேன் மூடுகிறாய் பர்தாவால்
அதன் வழியை////
இதயத்தின் ஓசை இறைவனின் வரம்
அதில் காதல் சுரம் ஏற்றும் உன் கரம்////
நீ வரும் பொழுதுகளில் எனக்கின்பம் ஊறும்
வாராமற் போனாலோ என் துன்பம் எங்கு போகும்////
நிலவாய் மலராய் விழியாய்
காதல் இசையாய் வருவாய்... ////
இடரில்லா இடமொன்று சொல்வேன்
படர்பாசி பரப்பினில் நான் நிற்பேன்////
வருவதும் வராததும் உன் விருப்பம் நானறிவேன்..அன்றியும் உன்
வருகைக்காய் காத்திருப்பேன் வாழ் தவமாய்....////
பாசி பரப்பது வழுக்கும் நீயின்றி
தூசியாய் கரைவேன் உன் முத்த நீரின்றி..!!////

முன்னர் நான் சொல்லியபடி, கஸலின் இலக்கணங்களில் ஒன்று இறுதி கண்ணியிலோ ஈற்றடியிலோ கவிஞன் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளலாம்

நகல் மனிதர் இருப்பார்கள் வாழ்வ தில்லை
அசல் கவிஞன் தமிழன்பன் இறப்ப தில்லை

..என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் தன் கஸல் ஒன்றில் தன் அடையாளம் அளித்திருப்பதைக் காணலாம்.


கஸலின் காதல் பிரிவு எல்லாக் காலங்களிலும் ஆர்ப்பாட்டமாக சொல்லப்பட்ட ஒன்று ஆகும் நமது தமிழ் திரைப் பாடல்களி்ல்,டி. ராஜேந்திரர் பாடல்கள் சிலவற்றை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். இளையராஜாவின் இசையில் வெளிவந்த பல பாடல்கள் முழுக்க முழுக்க காதல் பிரிவு பற்றியவை கஸல்கள் ஆகும். அத்துடன், ”முன்பே வா அன்பே வா, ..பூ பூப்பாவாய் வா”.....இவை இரண்டும் இந்துஸ்தானி ராகத்தில் அமையப்பெறின் கஸல்களே ஆகும் என அன்பர் அகன் அவர்கள் ஒரு கஸலுக்கான தம் பின்னூட்டத்தில் அழகாக எடுத்து உரைத்துள்ளார்.

ஒரு கவிதையின் பாடு பொருள் என்பது அதை வடிவமைக்கும் விதத்தில் தான் மாறு படுகிறது...
என்ன பாடு பொருளில் எழுத்தினாலும் அதை சொன்ன விதத்திலும் எந்த வித காரமும் குறையாமல் சொல்லும் துடிப்பில்தான் அந்த கவிதை ஒரு உலக அரங்கில் பேசப் படும் ஒரு படைப்பாக மாறுகிறது என்றும் இந்த தளத்தில் ஒரு சிறந்த கவிஞர் எழுதியதை படித்து இருக்கிறேன். பொதுவாக கஸலுக்கு ஒரு வடிவம் என்பதும் அதன் இலக்கணம் என்பதும் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு மீட்டல் இருக்க வேண்டும் .அந்த மீட்டல் இல்லாமல் வெறும் வடிவமும் இலக்கணமும் மட்டுமே வைத்து எழுதப் படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதில் அந்த மீட்டலில் எழுதப் படுவதே சாலச் சிறந்த கஸலாகும் என அந்தக் கவிஞர் சொன்னதை மீட்டல் என்பதை மீட்டர் எனவும் ஆங்கிலச் சொல் கொண்டு பொருள் கொள்ளலாம்...





எடுத்துக்காட்டாக மகாகவி ஈரோடு தமிழன்பன் படைத்த கஸல்

ஒருகொடியில் ஒருமலராய் இருக்க மாட்டேனோ?
ஒருமலரில் ஓரிதழாய் மணக்க மாட்டேனோ?
ஒருகொடிக்கும் ஒருமலர்க்கும் வாழ்க்கை ஆக்கும்
வேரடியில் ஒருமண்ணாய் இளக மாட்டேனோ?

வேய்ங்குழலில் ஒருதுளையாய் இருக்க மாட்டேனோ?
ஒருதுளையில் இசைத்துளியாய் நிரம்ப மாட்டேனோ?
ஒருகுழுலும் ஒருதுளையும் இருக்கும் மூங்கில்
காட்டிலொரு மழைத்துளியாய் உதிர மாட்டேனா?

பாட்டிலொரு பதமாக வாழ மாட்டேனா?
பதத்திலொரு எழுத்தாக நுழைய மாட்டேனா?
பதமென்றும் எழுத்தென்றும் பிறந்த வயிற்றில்
நான்பிறந்து குழந்தையெனத் தவழ மாட்டேனா?

மூலமென்ன முடிவென்ன தெரிய மாட்டேனா?
முடிவெடுக்க நடுவிடமாய் இருக்க மாட்டேனா?
நடுவிருக்கும் எனைவிட்டு விலகி வந்து
நான்பறந்து வெட்டவெளி எட்ட மாட்டேனா?

மற்றுமொரு கஸல், அதுவும் மகாகவி தமிழன்பன் ஐயா அவர்களது படைப்பு

மலர்களின் தாய்மொழியே! நீகொஞ்சம் பேசு
மனமுற்றம் மணக்கட்டும் சந்தனச்சொல் பூசு!

நிலவுகண்ட புதுக்கனவே! என்தூக்கத் துள்ளே
நீநிரப்பு பவுர்ணமிகள்! கவலையெல்லாம் தூசு!

அந்தியலையில் வலையெடுத்துப் பெண்ணேநீ வீசு!
வலையில்விழத் துடிக்கின்றேன்! பிடிப்பதுவும் லேசு!

அரும்புகளின் தேசங்கள் வெடிப்பதன்முன் கண்ணே!
சிரிப்பொன்று போடதுதான் மின்தங்கக் காசு!

இது அகன் அவர்களின் அருமையான கஸல்

நதியே நீ என்றாலும்
என் சிகரத்திலேயே உறைந்துவிடு!
வழிதான் நீ என்றாலும்
என் பயணத்தினூடே கரைந்துவிடு


மொழிதான் நீ என்றாகிலும்
என் கனவிலே நிறைந்திடு
வலிதான் என்றாகிலும்
என்கன்னங்களை இதழ்களால் அறைந்திடு

பழியென்று காதலுக்கு சாதியை எவர்
சொன்னாலும், மறுத்திடு
உன்னில் நான் என்னில் நீ,
வா உறவு வானில் பறப்போம். சிறகை விரித்திடு!
மலர்கள் மௌனம் சாதிப்பது
அழகின் தவம்
உன் மௌனம் மலர்வதே
காதலின் வரம்

காத்திருப்பதும் காக்கவைப்பதும்
காதலின் இலக்கணம் .அல்லவா
உடனிருப்பதும் உள் ஏங்குவதும்
காதலின் சுக சுரம் இல்லையா?
சுமந்துவந்த கூடையை இறக்கிவிடு
அதிலின்னும் நம் காதலை நிரப்பி விடு!

“எதுகைகளால் ஆன கஸல், சந்தங்களைக் கொண்டு மலரும் போது அங்கு இசை மணம் பரவுகிறது.....அதில் மனித மனம் மயங்குகிறது”.

.இணைய தளத்தில் யூ டியூபில், தமிழ் கஸல்களில், வசுந்தராவின் கஸல்கள் ஆகிய, “மனதுக்கென்ன ஆனதென்று யார் அறிவார், களங்கம் உலகம் தந்தது, எத்தனை மாற்றம் அவரிடம் போன்றவற்றை கேட்டொம் எனில், கேட்டுக் கொண்டே இருப்போம்.

அவரது கஸல்களில், மனதுக்கென ஆனதென்று எனும் கஸலின் வரிகள் கீழ்வருமாறு.

மனதுக்கென்ன ஆனதென்று யார் அறிவார்
ஏனித்தனை துயரம் இதை யார் அறிவார்

உன்னிடம் உள்ளத்தின் ரகசியம் சொன்னேன்
இதை நீ அறிவாயோ இல்லை யார் அறிவாரோ

ஏனித்தனை துயரம் இதை யார் அறிவார்
அறிந்து அறிந்து அறிந்து கொண்டு செல்வாயா

எனில் உள்ளதை எண்ணியே யாரறிவாரோ
எந்தன் மனதில்தான் எத்தனை துயரம் (2)

இதை நீ அறிவாயோ இல்லை யார் அறிவாரோ
ஏனித்தனை துயரம் இதை யார் அறிவார்!

பல கண்ணிகள், இசை கன்னியுடன் பிணைந்திருப்பின் வாழ்த்தெண்ணங்கள், வரி்சையிலே பரிசளிக்க காத்து நிற்கும். .இந்த எழுத்து தளத்தில், நிகழ்ந்து கொண்டிருக்கும் கஸல் திருவிழா மூலம் தமிழுக்கு மீண்டுமொரு பொற்காலம் தொடங்கி விட்டுள்ளது. கஸல் இலக்கணம் அறிந்து இனி எழுதுவோர் படைப்புக்கள் அமைந்து இசையும் இசைவாக இருந்து விட்டால், மொழியும், இலக்கியமும் இடையறவு படாமல் காக்கப்படுமேயானால், தமிழ் இலக்கிய வரலாற்றில் இது ஒரு மைல்கல் என இனிவரும் காலம் வரும் சந்ததியினர்க்கு எடுத்துச் சொல்லும்.

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,
நல்ல கஸல் படைக்கவும் நல்வாழ்த்துக்கள்.


பார்வைப் புத்தகங்கள்.
தகநோபு தகஹஷி , போஎற்றி அண்ட் போஎட்டிக்ஸ்,1989.
உலகத் தமிழ் இலக்கிய வரலாறு, பப் எண் . 489, 2004, உலக தமிழ் ஆரார்ய்ச்சி நிறுவனம், சென்னை.113.
www . ப்ராஜெக்ட் மதுரை
www . விக்கிபீடியா.ஒர்க்.
தேவநேய பாவாணர் ஞா . தமிழிலக்கிய வரலாறு, 1979.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (31-Dec-15, 2:03 pm)
பார்வை : 656

சிறந்த கட்டுரைகள்

மேலே