வானம் தொடும் தூரம்

அந்தியில் மறைந்தாலும்
எந்த நாளும் பூரணமாய்
பிரகாசிக்கும் கதிரவன்
ஓய்வு எடுப்பதில்லை
அரைத்திங்கள் தேய்ந்து
வளரும் ஒய்யார நிலவு
ஒரு நாள் இருளிற்கு
ஒளிந்து இருப்பதில்லை
ஆழமாய் கிடந்தாலும்
கரை தொட ஆர்ப்பரிக்கும்
அலைகளின் பாய்ச்சலால்
கால்கள் வலிப்பதில்லை
பிரபஞ்சம் மூச்செடுக்க
பஞ்சமின்றி எங்கும் நிறையும்
அடங்காத காற்றுக்கு
சிறகுகள் ஒடிவதில்லை
இரவே காணாது மடியும்
ஒரு பகல் ஆயுளோடு
உறவாடும் பூக்களுக்கு
உயிரின் நிலை கசப்பதில்லை
உயிர்ப்பின் இருப்பிற்காய்
தன்னை உருக்கி நிதம்
உணவு தொகுக்கும் மரங்களுக்கு
வாழ்வு சலிப்பதில்லை
தணல் பற்றி எந்த
மாசுக்களையும்
சுவாலையால் கொழுத்தும்
தீயிற்கு சுடுவதில்லை
போகும் இடம் தாவி
தாகம் தீர்த்த மலையருவி
யாரையும் நம்பி
மண்டியிடுவதில்லை
உளியின் வலி தாங்கி
உடைந்தழியும் கருங்கல்
செதுக்கிய சிற்பமாகி
சிதைந்தழிவதில்லை
மழை நீர்த்துளி சிப்பிக்குள்
விழுந்து முத்தாகுவது போல
எட்டிப் பிடிப்பது இலக்கெனில்
தொடு வானம் தூரமில்லை
- பிரியத்தமிழ் -