புதிய விடியல்
* * * * * * * * * *
அந்த வானம்
வெட்கத்தில் சிரித்த
புதுமணப் பெண்ணின்
கன்னம் போல
நாணிச் சிவந்தது
அவன்
ஆனந்த மேலீட்டால்
உத்வேகத்துடன்
பிரகாசச் சிரிப்புடன்
பிரவாகிக்கிறான்
இறந்த கால
பிரமைகளை மறந்து
நிகழ்கால விம்பங்களை
பிறப்பிக்கிறது
பிரபஞ்சம்
அர்த்தம் பொதிந்த
எதிர்காலத்தை போதிக்க
ஓர் ஒளியெழலில்
இமை விழித்து - பெரும்
புன்னகை விரிக்கிறது
பூவிதழ்கள்
காலத்தின் தேவைக்காக
வரலாற்றை வேக வைத்து
பாதுகாப்பு பெட்டிக்குள்
அடைக்கிறது
மனித மனங்கள்
அகங்கார
விஷங்களை களைய
கல் குண்டாய் கனக்கும்
மனங்களை இறக்க
வெளிறிக் கிடக்கும்
வாழ்வுகள் பிரகாசிக்க
எல்லைகள் வரை
வெற்றிகள் குவிய
பேதமில்லாத
விளக்கின் ஒளி போல
புதிய விடியலில்
பிரகாசிப்போம் !
- பிரியத்தமிழ் -